(UTV|கொழும்பு) – இளைஞர்கள் 11 பேர் கடத்தல் விவகாரம் தொடர்பில் பிரதிவாதிக்கு உதவியமை குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைமை அதிகாரி ரவீந்திர விஜய குணவர்தனவை விடுதலை செய்வதற்கான இயலுமை இல்லை என கொழும்பு – கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க பகிரங்க நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
வழக்கின் பிரதிவாதியான கடற்படையின் முன்னாள் தளபதி லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பிச்செல்வதற்கு உதவி ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் ரவீந்திர விஜயகுணவர்தன மற்றும் லக்சிறி அமரசிங்க ஆகியோரை விசாரணைகளிலிருந்து விடுவிக்க முடியாது என நீதவான் தெரிவித்துள்ளார்.
இந்த 2 சந்தேகநபர்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கிடமின்றி நீரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் காணப்படுவதாக நீதிமன்றம் கருதுவதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, குற்றவியல் தண்டனை கோவையின் 120/3 சரத்திற்கு அமைய, சந்தேகநபர்களை விடுவிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அனுமதி வழங்க முடியாது எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கின் மற்றுமொறு பிரதிவாதியாக சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சியைப் பெயரிடுவது தொடர்பில் அடுத்த வழக்கு விசாரணையின்போது அறிவிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.