உள்நாடு

சிங்கள இனவாத ஊடகங்களில் தினமும் என்னைப்பற்றிய அவதூறுகளே! – ரிஷாட் குற்றச்சாட்டு

(UTV|கொழும்பு)- சிங்கள ஊடகங்கள் தினமும் தன்னைப்பற்றி ஏதாவது பொய்களையும் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் புனைந்து, தலைப்புச் செய்திகளாகவும் முன்பக்கங்களில் கொட்டை எழுத்துக்களில் முன்னுரிமை கொடுத்தும் பிரசுரித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சிங்கள மக்களிடமிருந்து என்னை அந்நியப்படுத்துவதற்காக, திட்டமிட்டு இந்தக் காரியத்தை அவர்கள் செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

மன்னார், மாந்தை மேற்கு, சொர்ணபுரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சிங்கள மக்களிடம் என்னை எதிரியாகக் காட்டுகின்றனர். அவர்களின் விரோதியாகவும் துரோகியாகவும் சித்தரிக்கின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இவர்களின் இந்த தூற்றும்படலம் இன்னும் வீரியமடையும்” என்று தெரிவித்த அவர், மேலும் கூறியதாவது,

“சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுப்பதும், அவர்களின் பிரச்சினைகளை தைரியமாகத் தட்டிக்கேட்பதும், பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கு எதிராகக் குரல்கொடுப்பதுமே இவர்களுக்குப் பிரச்சினை.

சிறுபான்மைத் தலைமைகளை அடக்குவதன் மூலம், அவர்கள் சார்ந்த கட்சிகளை நிலைகுலைய வைத்து அழிப்பதுவே இவர்களின் முதலாவது திட்டம். அதன்மூலம் சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த பலத்தை தகர்ப்பதும் அதன்மூலம், அவர்களை பேரினவாத சக்திகளுக்கு அடிமைப்படுத்துவதும் இவர்களின் இலக்காகும். தூரநோக்குடன் இவர்கள் இந்த விஷப் பரீட்சையில் இறங்கியுள்ளனர். எதிர்வரும் தேர்தலில் இவர்கள் மிகவும் நாசூக்காக தமது திட்டத்தை செயற்படுத்துவர். அதன் முதற்படியாகவே சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில், பேரினவாத ஏஜெண்டுகளை ஊடுருவச்செய்துள்ளனர். எனவே, நாம் விழிப்புடனிருந்து இந்த செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும்.

யுத்தத்தினால் நாம் பட்ட கஷ்டங்கள் பேரினவாதிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்ல. இடம்பெயர்ந்து வாழ்ந்தோம். பெற்றோர், பிள்ளைகள், உறவினர்களை இழந்தோம். சொத்துக்கள் சுகங்களை இழந்து நிர்க்கதியாக வாழ்ந்தோம். யுத்தமுடிவின் பின்னர், சிறுபான்மையினரான நாம் மீண்டும் கௌரவமாகவே நமது பிரதேசத்தில் குடியேறினோம். அழிவின் மத்தியிலேயே நாம் மீண்டெழுந்திருக்கின்றோம். எம்மைப் பொறுத்தவரையில், ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் போலவே உங்களை நினைத்து பணிகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

தற்போது எம்மை வீழ்த்துவதன் மூலம், சிங்களப் பிரதேசங்களில் தமது வாக்கு வங்கிகளை அதிகரிக்கும் நோக்கிலேயே, சிங்கள இனவாத ஊடகங்களும் பேரினவாதிகளும் தொழிற்படுகின்றனர். சிறுபான்மைச் சமூகம் ஒன்றுபட்டு, தமது வாக்குகளை சிறுபான்மைக் கட்சிகளுக்கு அளிப்பதன் மூலமே, பேரினவாதிகளின் திட்டத்தை முறியடிக்க முடியும்” என்றார்.

ஊடகப்பிரிவு

Related posts

பட்டதாரிகளுக்கான பயிற்சித்திட்டம் இன்று ஆரம்பம்

“அங்கஜனுக்கு உயர் பதவியை வழங்கியது” அங்கஜன் இராமநாதன்

மகிழ்ச்சியுடன் ஆதரிப்போம் – நாளை வரை காத்திருங்கள் – மஹிந்த.