(UTV|கொழும்பு) – காலனித்துவ ஆட்சியில் இருந் து 1948ஆம் ஆண்டு சட்டரீதியாக கிடைக்கப் பெற்ற சுதந்திரம் 2015ஆம் ஆண்டு தவறான அரசியல் செயற்பாட்டின் ஊடாக இல்லாமல் போகும் அபாயத்தை எதிர்கொண்டது. கிடைக்கப்பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற திடசங்கற்பம் ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கப்பெற்ற பெறுபேற்றின் ஊடாக வெற்றி பெற்றுள்ளது.
நாட்டில் வாழும் அனைத்து பிரஜைகளும் அபிவிருத்தி முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 72ஆவது சுதந்திர தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுதந்திர தின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை நாம் இன்று கொண்டாடுகின்றோம்.
கடந்த சில வருடங்களில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கிடைக்கப்பெற்ற சுதந்திரம் பாரிய சவாலுக்குட்பட்டதை அவதானிக்க முடிந்துள்ளது. சுதந்திரத்தை பெற்றுக்கொள்வது மற்றும் அதனை பாதுகாத்துக் கொள்வது ஆகியன இரு பிரிவாக நோக்கப்பட்ட இரு அம்சங்கள் என்பதே நாம் அந்த அனுபவத்தின் ஊடாக கற்றுக்கொண்ட பாடமாகும்.
1948ஆம் ஆண்டு சட்ட ரீதியாக கிடைக்கப்பெற்ற இந்த சுதந்திரம் 2015ஆம் ஆண்டு பிழையான அரசியல் செயற்பாட்டினால் இல்லாமல் போகும் நிலை காணப்பட்டது. கிடைக்கப் பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற திடவுறுதி மக்கள் மத்தியில் காணப்பட்டன. இந்த உறுதிப்பாட்டை கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள் ஊடாக அறிந்துகொள்ளலாம்.
சுதந்திரம் கிடைத்த 72 ஆண்டுகளை நாம் மீட்டிப்பார்க்க வேண்டும்.அவற்றில் மகிழ்ச்சியடைய கூடிய பல விடயங்கள் உள்ளன. அவ்வப்போது ஏற்பட்ட நெருக்கடியின் மத்தியிலும் கூட சர்வசன வாக்குரிமை அடிப்படையிலான பிரதிநிதித்துவ ஜனநாயக முறை இந்நாட்டில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. எழுத்தறிவு, சுகாதாரம் ஆகிய விடயங்களில் நாம் ஏனைய நாடுகளைவிட ஒப்பீட்டளவில் முன்னிலை வகிக்கின்றோம்.சுதந்திரமான ஊடகத்துறை காணப்படுவதுடனும் மக்கள் பாதுகாப்பாக வாழும் சூழலும் காணப்படுகின்றன.நாம் 2006-–2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் சிறப்பான இலக்குகளை பெற்றுக் கொண்டுள்ளோம்.
அரசியல் ரீதியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்துவது எம் முன்னாள் உள்ள பிரதான சவாலாகும். புதிய அரசாங்கத்துடனும் புதிய தசாப்தத்துடனும் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம். மக்களிடமும் குறிப்பாக இளம் சமூகத்தின் மத்தியில் நாட்டை கட்டியெழுப்புவதற்கான உத்வேகம் தோற்றம் பெற்றுள்ளது. இதனால் இலங்கை பொன்னான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது என்ற செய்தியை இன்றைய நாளில் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.