(UTV|கொழும்பு) – பெரும்பான்மை பலமில்லாத இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் வரப்பிரசாதங்களையும் விஷேட உரிமைகளையும் பறிப்பதற்கு தற்போதிலிருந்தே முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுத்தேர்தலில் தனியாகவோ அல்லது அறுதிப் பெரும்பான்மையுடனோ ஆட்சி அமைத்துக்கொண்டால், சமூகத்தின் நிலை எவ்வாறு அமையும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகின்றதெனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் நேற்று(02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,
“தேர்தல் முடிந்துவிட்டால் இந்தப் பிரதேசங்களுக்கு பல கட்சிகளின் வேட்பாளர்களும் படையெடுப்பது வழக்கமானதுதான். எனினும், இம்முறை தேர்தலில் சற்று வித்தியாசமாக, முகவர்களான வேட்பாளர்களும் களமிறங்கும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலில் வெற்றிபெற்று, பாராளுமன்ற உறுப்பினர்களாக வருவது இவர்களின் நோக்கம் அல்ல. தமக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்றிக் கொடுப்பதன் மூலம், இருதரப்பும் ஆதாயம் பெறுவதே இவர்களின் திட்டமாகும். இது இன்னொரு வகையான அரசியல் வியாபாரமாகும்.
சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு, எதிர்கால இருப்பு மற்றும் நமது சிறார்களின் வருங்காலம் ஆகிய அனைத்தும் எதிர்வரும் பொதுத்தேர்தலிலேயே தங்கியுள்ளது. ஏனெனில், அண்மைக்காலமாக இந்த விடயங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவது நமது கண்முன்னே தெரிகின்றது.
நமது மக்களின் வாக்குகளைப் பிரித்து, சுக்குநூறாக்கும் சதிவலைப்பின்னலில் சிலர் சிக்கியுள்ளனர். அந்தச் சதியில் நாம் விழுந்தோமேயானால் இனி ஒருபோதும் மீட்சிபெற முடியாது. மொட்டுக் கட்சியில் போட்டியிடும் எந்தவொரு சிறுபான்மை மகனும் பாராளுமன்ற உறுப்பினராக முடியாது என்பதே நிதர்சனம்.
இந்த யதார்த்தத்தையும் மீறி, அந்தக் கட்சியில் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த வேட்பாளரை களமிறக்குவது, நமது வாக்குகளை சிதறடிப்பதற்கே! அதன்மூலம், குறித்த மாவட்டத்தில் பெரும்பான்மையின பாராளுமன்ற உறுப்பினர்களை மேலும் அதிகரிக்க முடியுமென இவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர்.
அத்துரலியே ரத்தன தேரர், விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோரின் சிறுபான்மை விரோத பிரேரணைகள் வெற்றிபெறுவதற்கு, பெரும்பான்மையின பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படல் வேண்டும்.
இதுவே இவர்களின் எதிர்காலத் திட்டமாகும். அதுமாத்திரமின்றி, இனிவரும் காலங்களிலும் அவர்கள் கொண்டுவர உத்தேசித்திருக்கும் சிறுபான்மை விரோத சிந்தனைகளுக்கு வலுச்சேர்ப்பதாக, நமது வாக்குகள் இருக்கக் கூடாது. பாராளுமன்றச் சமநிலையை இல்லாமலாக்கி, சிறுபான்மை சமூகத்தை அடக்கி ஒடுக்குவதே இவர்களின் பேரினவாத சிந்தனையாகும். அந்தவகையில், நமது சமூகத்துக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை அழிப்பதும், அவர்களின் கை ஓங்குவதை முறியடிப்பதுமே இவர்களின் இலக்காக இருக்கின்றது.
‘எங்களை சிறையில் அடைக்க வேண்டும்’ என வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதற்கும் இதுவே பிரதான காரணமாகும். இந்த சமூகத்துக்காக பேசும் தலைமைகளையும், பிரச்சினைகள் ஏற்படும்போது தட்டிக் கேட்கும் அரசியல்வாதிகளையும், சமுதாயத்துக்காக பணியாற்றுவோரையும் துரோகிகளாக இவர்கள் பார்க்கின்றனர்.
அதேபோன்று, இந்தப் பிரதேசங்களில் மக்களை மீளக்குடியேற்றுவதும், கட்டடங்களையும் வீடுகளையும் கட்டிக்கொடுப்பதும் இவர்களுக்கு துரோகமாகத் தெரிகின்றது” என்றார்.
ஊடகப்பிரிவு–