(UTV|கொழும்பு) -கட்சிப் பற்றாளர்களையும் உண்மையான தொண்டர்களையும் இனங்காண்கின்ற பொன்னான சந்தர்ப்பமாகவே இந்தக் காலகட்டத்தை நாம் பார்க்கவேண்டி இருக்கின்றதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மாந்தை மேற்கு பிரதேசபைக்குட்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நேற்று (16) மாலை நடந்த இந்த சந்திப்பின்போது மாந்தை மேற்கு பிரதேசபை தவிசாளர் செல்லத்தம்பு,மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர், கட்சியின் முக்கியஸ்தரான அமீன் உட்பட பல பிரமுகர்கள் உடனிருந்தனர்.
அதிகாரத்தோடும் பதவியோடும் இருக்கின்றபோது எம்முடன் இருக்கின்ற ஆதரவாளர்களையும் அதிகாரமில்லாதபோது நம்மை அரவணைக்கும் ஆதரவாளர்களையும் அரசியலில் கண்கூடாக கண்டிருக்கின்றோம்.பதவி இல்லாதபோது நம்மை அரவணைக்கும் ஆதரவாளர்களும் தொண்டர்களும் முக்கியஸ்தர்களுமே உண்மையான கட்சியின் நேசர்கள்.அதேபோன்று பதவிகள் உள்ளபோது எம்மிடம் எந்த தேவைக்கும் வராதவர்கள்.பதவிகள் போனபின்னர் வந்து, எம்முடன் உறவாடுவதும் உபசரிப்பதும் அவர்களின் உண்மையான மனித நேயத்தையும் சமூகப்பற்றையும் வெளிக்காட்டுகின்றது.
மக்கள் காங்கிரசின் வளர்ச்சி பலரின் தியாகங்கள் மூலம் கட்டியெழுப்பப்பட்டது. மன்னாரில் பிறந்த என்னை தேசியக் கட்சியின் தலைமையாக உயர்த்தியதும். ஒரு தசாப்தத்திற்கு மேலாக அமைச்சுப்பதவியை அலங்கரிக்க செய்ததும் பலரின் அயராத அர்ப்பணிப்புகள் தான்.
இறைவனின் உதவியுடன் வளர்ந்த இந்தக்கட்சியை இறைவனின் நாட்டம் இல்லாமல் எவருமே வீழ்த்தமுடியாது.கட்சித் தலைமையையும் கட்சியையும் அழிப்பதிலேயே ஈடுபட்டுக்கொண்டு இருப்பவர்கள் இன்னுமே தோல்விகளை தான் சந்தித்துக்கொண்டு இருக்கின்றனர்.
52 நாள் சதிமுயற்சிக்கு உடன்படாத காரணத்தினாலேயே எனக்கெதிராக பெளத்த விரோத, சிங்கள குரோத முத்திரை குத்தப்பட்டுள்ளது . வில்பத்து இயற்கை வனத்தை நாசமாக்கும் மோசமானவராக என்னை சித்தரிப்பதும் இனவிரோத செயற்பாட்டின் இன்னொரு வடிவமே.
சஹ்ரானின் குண்டுவெடிப்புடன் என்னை தொடர்புபடுத்தினர். எந்த தொடர்பையும் கண்டுபிடிக்க முடியாத கையறுநிலையில் வேறு ஏதாவது குற்றம்செய்திருப்பேனா என்று துருவித் துருவி தேடுகின்றனர்.எனினும் இதுவரையில் எந்த தடயங்களும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அரசியலில் பல்வேறு அமைச்சு பதவிகளை நாம் வகித்தபோதும் எந்த அமைச்சிலும் எந்தத் தவறையும் எந்த குற்றத்தையும் காணமுடியாத நிலையில் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
தேர்தல் காலத்திலும் தேர்தல் முடிந்த பின்னரும் என்னை கூட்டுக்குள் தள்ளவேண்டுமென கூக்குரல் போட்டனர். ‘இன்று அடைபடுவார். நாளை பிடிபடுவார். அடுத்தவாரம் அவரின் கதை அம்போதான்”. என்றெல்லாம் வாய்கிழிய கத்தியவர்கள் தற்போது வாயடைத்துப்போயுள்ளனர்.
றிஷாட் பதியுதீனை சிறைப்படுத்திவிட்டால் பேரினவாத வாக்குகளை அதிகரிக்கமுடியுமென இவர்கள் சிந்திக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த வெட்டிக் கதைகளையெல்லாம் செவிவழியில் உள்வாங்கிக்கொண்டு , நம்மவர்கள் சிலரும் எம்மைவிட்டு தூரமாக நினைக்கின்றனர்.அவர்களின் உண்மைத்தன்மையை அறிவதற்கும் உணர்வதற்கும் நல்ல சந்தர்ப்பம் தற்போது எமக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்..
-ஊடகப்பிரிவு.