(UTV|COLOMBO) – தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ராஞ்சியில் நடந்த இந்தப் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 497 ஓட்டங்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் பின்னர் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 162 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணியை விட 335 ஓட்டங்களினால் பின்தங்கியது.
இதையடுத்து பாலோவ்ன் பெற்ற அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் ஓட்டங்களைச் சேர்க்கத் தடுமாறியது.
அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுக்க, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே சுழல் பந்துவீச்சாளர் நதீம், புரூயினையும் நிகிடியையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.
இதனால் அந்த அணி 133 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 202 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.