கட்டுரைகள்

புனிதப் போருக்குள் சமூகச் சாயம்

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவின் அரசியல் நகர்வுகள் சிலருக்கு வியப்பாகவும்,பலருக்கு வேடிக்கையாகவும் இருக்கலாம். இவர் தேர்தலில் போட்டியிடும் உண்மையான நோக்கத்தை ஆண்டவனும்,அவரும்தான். அறிவர்.வௌிப்படையாக தனது நோக்கத்தைச் சொல்வாரானால் இதிலுள்ள சரி,பிழைகளை எடை போடக்கூடியதாக இருக்கும்.”எவரின் முகவராகவும் செயற்படவில்லை,முஸ்லிம்களின் முகவராகவே களமிறங்கினேன்” எனக்கூறும் ஹிஸ்புல்லா,வெற்றியை எதிர்பார்க்குமளவுக்கு தானொரு முட்டாளுமில்லை என்கின்றார்.  எந்த அரசாங்கங்கள் வந்தாலும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு ஆமாம் சாமி போடுவதைத் தவிர முஸ்லிம் தலைவர்கள் எதையும் சாதிக்க முடியாதென்றும் அவர் கூறுகிறார்.இரு தரப்பையும் பௌத்த இனவாதிகள் பின்னாலிருந்து இயக்குவதால் தனிவழி செல்வதைத் தவிர வேறு வழியில்லை,மும்முனைப் போட்டிகளுள்ள இம்முறைத் தேர்தலில் எவரும் ஐம்பது வீத வாக்குகளைப் பெற முடியாதென்ற யதார்த்தத்தில், தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ இரண்டாவது விருப்பு வாக்கு வழிவகுக்கும் என்பதே இவரது வாதம்.

களத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளில் ஹிஸ்புல்லா மூத்த தலைவர். அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் தனித்துவ கட்சிகள் எதிலும் நிலையாக,நிற்காது அடிக்கடி களம்மாறி,கட்சி மாறி தனிப்பட்ட இமேஜை உயர்த்திய அரசியல்வாதியும் இவர்தான்.எனவே இவரது வியூகங்களை இலேசாக எடைபோடவும் முடியாது.ஆற,அமர்ந்துதான் ஹிஸ்புல்லாவின் வியூகங்கள்,விவாதங்களை அலசிப்பார்க்க வேண்டும்.

சமூகத்தின் சார்பாகக் களமிறங்கத் தீர்மானித்திருந்தால் முஸ்லிம் கட்சிகளின் தலைமைகளை இவர் ஆலோசித்திருக்க வேண்டும். ஆலோசித்திருந்தாலும் இதற்கான அனுமதியைப் பெற்றதாகத் தெரியவில்லை. ஆகக் குறைந்தது முஸ்லிம் பிரதேசங்களில் சந்திப்புக்களை நடத்தி அம்மக்களின் நிலைப்பாடுகளையாவது, இவர் தெரிந்து கொள்ளவில்லை. சில முஸ்லிம் புத்திஜீவிகள், உலமாக்கள், துறைசார் நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய இவர் சாதாரண மக்களின் மன நிலைகளைப் புரியத்தவறியது கவலையளிக்கிறது.

பொதுவாக ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்கள் அனைவரும் அரசியல் பகையை மறந்து கூட்டுச் சமூகமாக செயற்பட்டதாலேயே நாம் பாதுகாக்கப்பட்டோம். இவரது மட்டக்களப்பு பல்கலைக்கழகம் உட்பட, சமூகம் எதிர் கொண்ட அத்தனை இனவாத நெருக்கடிகள், அழுத்தங்களை முறியடிக்க,சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு எமது சமூகம் தள்ளப்பட்டிருந்த நிலையிலே,முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாகப் பதவி துறந்து சமூகப்பலத்தை வௌிப்படுத்தினர். இவர்களின் பதவி விலகல்களில் சமூகக் கூட்டுப்பொறுப்பு இருந்ததை எவரும் நிராகரிக்க இயலாது.இந்தக் கூட்டுப் பொறுப்பால் இனவாதப்பொறியிலிருந்து எமது சமூகம் பாதுகாக்கப்பட்டது.

மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைகழகம் மீதான,இனவெறிப்பாய்ச்சல் சற்றுத் தணிக்கப்பட்டதும் எமதுசமூகத்தின் கூடுப்பொறுப்பால்தான். மேலும் இந்தத் தணிவு வேட்பாளர் ஹிஸ்புலாவையும் சற்று அமைதியடையச் செய்திருக்கும். ஈஸ்டர் தாக்குதலுக்குப்பின்னரான நெருக்கடிகளே ஹிஸ்புல்லாவை ஜனாதிபதித் தேர்தலில் குதிக்கத் திணித்திருந்தால்,இதைக் கூட்டுப் பொறுப்பாக கருதுவதே பொருத்தமானது. இவ்விடயத்தில் ஹிஸ்புல்லா கூட்டுப் பொறுப் பிலிருந்து விலகியதாகக் கொள்ள முடியுமா? இவ்விடத்தில்தான் இந்த விவாதம் வலுவடைகிறது.

ராஜபக்‌ஷவின் அரசிலும்,மைத்திரிபாலசிறிசேனவின் தலைமையிலும் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த எமது சமூகத்துக்கு எதிரான,இனவாத வெறியாட்டங்களை எதிர்த்து,அப்போதே பதவிகளைத் தூக்கி வீசிக் குரல் கொடுத்திருந்தால் ஹிஸ்புல்லாவின் நகர்வுகளில் தௌிவான நியாயங்கள் தென்பட்டிருக்கும்.இப்போது ஏன் இந்தக்கவலை.பரவாயில்லை “வயல் சீசனில்தான் அறுவடைக் காரனுக்கு கிராக்கி” தேர்தல் வரை பொறுத்திருந்த இவர்,களத்தை சாதமாக நகர்த்துகிறார் என்ற திருப்தியும் உள்ளமை உண்மைதான்.ஆனால் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளரென்ற ஹிஸ்புல்லாவின் வியூகம் நடைமுறைக்குச் சாத்தியமானதா? என்பதிலே சந்தேகம். பிற வேட்பாளரை ஆதரித்து,எந்த ஜனாதிபதி வேட்பாளரும் பிரச்சாரம் செய்யக் கூடாதென்ற கட்டுப்பாடுகளுக்குள் இரண்டாவது விருப்பு வாக்குப்பற்றி மிக இரகசியமாகவே பிரச்சாரம் செய்ய நேரிடும்.16 இலட்சம் முஸ்லிம் வாக்குகளில் மூன்று இலட்சம் வாக்குகளை இலக்கு வைத்துக் களம் குதித்துள்ள இவர், இரகசிய அணுகுமுறைகளால் எப்படி இந்த வாக்குகளைப் பெறப்போகின்றார்? .முதலாம் திகதி வரை ஒட்டகத்துக்கு முதலாம் விருப்பு வாக்கையும் அதற்குப் பின்னர் இரணடாம் விருப்பு வாக்கிற்கும் உழைக்கவுள்ள இவர்,13 நாட்களுக்குள் இந்தச் செய்தியை முஸ்லிம்களிடம் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பார்?. கடும்போக்கர்கள்,பௌத்த இனவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி வாக்களிப்பதற்கே தயங்கும் சூழ்நிலையிலுள்ள, தென்னிலங்கை முஸ்லிம்கள், தனித்துவம் கோரும் ஹிஸ்புல்லாவை ஆதரிப்பாளர்களா? இப்பகுதியில் முன்னெடுக்கப்படும் இரகசியப் பிரச்சாரங்கள் தென்னிலங்கையில் வேறு அர்த்தங்கள்,அச்சங்களைத் தோற்றுவிக்காதா?இந்த அச்சம் இல்லையென்றால் இனவாதிகள், கடும்போக்கர்கள் அதிகமாவுள்ள ராஜபக்‌ஷக்களின் அணிக்கா?இரண்டாவது விருப்பு வாக்குகளை இவர் கோரவுள்ளார்.

தேர்தல் நடைபெறுவதற்கு பல நாட்களுக்கு முன்னர்,முஸ்லிம்களின் பாதுகாவலனை அடையாளம் காண்பது கடினமானது.தேர்தலுக்குப் பின்னர் அடையாளம் கண்டாலும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.பாராளுமன்றமாக இருந்தால் அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கப்போவதாக அச்சுறுத்தும் சந்தர்ப்பமாவது கிடைக்கும்.ஜனாதிபதித் தேர்தலில் இதற்குச் சாத்தியமில்லை.மூன்று இலட்சம் முஸ்லிம் வாக்குகளைப் பெற்று சர்வதேசம் செல்லவுள்ள யுக்திகள் பொருத்தமானதுதான்.எனினும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான சமூகக் கூட்டுப்பொறுப்பிலிருந்து விலகிச் செயற்படுவது எவ்வளவு சாத்தியம் என்பதை காலமே நிரூபிக்கும்.

– சுஐப் எம் காசிம்

Related posts

நேரடிக்களத்தில் நின்றதற்கா இத்தனை நெருக்குவாரங்கள்?

கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது? இதை நாம் எவ்வாறு சமாளிப்பது?

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்