கட்டுரைகள்

“சந்தர்ப்பக் கைதியாகும் முஸ்லிம் உம்மத்”

(UTVNEWS|COLOMBO) – இஸ்லாம் பற்றிய கோட்பாடுகள் பிற மதத்தவர்களை எவ்வாறு சென்றடைகின்றன, சர்வதேசத்தில் குறிப்பாக இலங்கையிலுள்ள பிற மதத்தினர் இஸ்லாத்தை எவ்வாறு புரிந்துள்ளனர், இஸ்லாமிய இயக்கங்களின் பிரச்சாரங்களாலா? அல்லது நூல்களைப் படித்தறிந்தா? இல்லை முஸ்லிம்களின் நடத்தைகளைக் கொண்டா? சாந்தி மார்க்கத்தைப் புரிவதில் முஸ்லிம்களுக்குள்ளே, கருத்துப்பிளவுகள் உள்ள இக்காலத்தில் ஏனைய மதத்தினரை,இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ள வைப்பது எப்படி? இதுபோன்ற ஐயங்களையே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதும்,விடுதலையும் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாத்தின் தோற்றுவாயில்களிலிருந்தும் சிலுவைப் போருக்குப் பின்னரும் கருத்தியல் ரீதியாக முஸ்லிம்க ளைப் பலமிழக்கச் செய்வதில் வெற்றியடைந்த எதிரிகள் காலவோட்ட நகர்வுகளுக்கேற்ப, புதிய கருத்தியல்களை புகுத்தியே வருகின்றனர்.இந்த வெற்றிகள் 2001.09.11 அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் இரட்டிப்படைந்து, இலங்கையில் நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களில் பல்லினத்தவர் மத்தியில் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டது.

ஈமான், அகீதா, ஆத்மீக நம்பிக்கைகளைப் பாதுகாப்பதற்கு மட்டும் தற்காப்புக்காக அனுமதிக்கப் பட்ட புனித “ஜிஹாத்” இன்று, இது தவிர்ந்த அரசியல், பொருளாதார, இராணுவ, தனிப்பட்ட, நோக்கங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக, அர்த்தங்கற்பிக்க முனைவதால் வந்துள்ள வினைகளே இவை.

“ஜிஹாத்” செய்யாமல் ஈமான், அகீதா, ஆத்மீக நம்பிக்கைகளை பாதுகாப்பதற்கான வேறு வழியாக “ஹிஜ்ரத்” புலம்பெயர்தலையும் இஸ்லாம் காட்டியும் கற்றும் தந்துள்ளது. கொலைகளைக் கடைசி வரைக்கும் தவிர்ப்பதற்கு இஸ்லாம் காட்டியுள்ள வழிகளே இவை.

தனிப்பட்ட, சாதாரண, திட்டமிட்ட குரோதங்களுக்காக உயிர்களைக் கொலை செய்து விட்டு மதச்சாயம் பூசும் அல்லது கலாசாரக் காரணங்கள் கற்பிக்கும் அல்லது சமூக நியாயத்தில் திணிக்கும் தீவிரங்கள் புனிதப்போராகாது. இதை இஸ்லாம் அல்லாத சமூகத்தினரிடம் யார் எடுத்துச் சொல்வது? இது சொல்லப்படாததாலே இன்று “இஸ்லாமோபியா” என்ற “பிழையான புரிதல்” ஏற்பட்டு சகல முஸ்லிம்களும் தீவிரவாதியாகவும் , பயங்கரவாதியாகவும், அடிப்படைவாதியாகவும் சர்வதேச அளவில் பாரக்கப்படுகின்றனர். இப்பிழையான புரிதல்களை அவசரமாகக் களைவதில்தான் முஸ்லிம் சிவில் சமூகத்தின் பாதுகாப்புக்கள் தங்கியுள்ளன. இல்லாவிட்டால் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர்,டாக்டர் ஷாபி உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் விசேட,சாதாரண பிரஜைகளையும் குற்றவியல் சட்டங்கள் தீண்டவே செய்யும்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைதாகி 32 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையானார். தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு 32 நாட்களில் விடுதலையானவர் இவர்தான்.இவரின் விடுதலையில் அரசியல்,சிவில் சமூகங்களின் அழுத்தங்கள் அளப்பரிய பங்காற்றின. அழுத்தங்கள் என்பதை விடவும் அரசியல், சிவில், ஆத்மீக அமைப்புக்களின் ஒற்றுமை, ஒருங்கிணைந்த செயற்பாடுகளே உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் விடுதலைக்குப் பங்களித்தன.

முன்னாள் அமைச்சர் பௌஷியின் தலைமையில் அடிக்கடி ஒன்று கூடிய முஸ்லிம் அமைச்சர்கள், எம்பிக்கள் இவரின் விடுதலைக்குத் தேவையான அனைத்து நகர்வுகளையும் மிகக் கச்சிதமாக நெறிப்படுத்தி, விடயங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் பொறுப்பை அமைச்சர்களான கபீர்ஹாஷிம், ரவுப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன் மற்றும் ஹலீம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

ஒட்டு மொத்தமாக ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் அனைத்து அமைப்புக்களும் ஒன்றித்து வௌிப்படுத்திய சமிக்ஞைகள் இஸ்லாமும் முஸ்லிம்களும் பயங்கரவாதம், பலாத்காரம், வன்முறைகளுடன் தொடர்பில்லை என்பதைப் புரிய வைத்துள்ளன. இது வெற்றியின் வாயிலுக்குள் முஸ்லிம்களை அழைத்துச் சென்றுள்ளதைக் காட்டுகிறது. ஆனால் பூரணமாக இந்த வாயிலுக்குள் நுழைவதற்கு இன்னும் பங்காற்ற வேண்டுமென, உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் எங்களுடனான சந்திப்பில் மனம் திறந்தார்.

“கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவில் தன்னுடன் தடுத்து வைக்கப்பட்டோரில் பலர் 15 வயதுடைய முஸ்லிம் சிறுவர்கள். தலைமைத்துவ பயிற்சிக் குற்றச்சாட்டுகள் இவர்களின் கைதுகளுக்கு அடிப்படை. இந்தப்பயிற்சிகளில் மூளைச்சலவையே பிரதானமானது” என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி தனது தலைமையகத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வில் எமக்கு அவர் விபரித்தார்.

இந்த மூளைச்சலவைகளை முறியடித்திருந்தால் ஈஸ்டர் தாக்குதல்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். இஸ்லாமிய இயக்கங்களிடையிலான புரிந்துணர்வு தூரமானமை, கருத்து மோதல்களால் தீவிரவாத மூளைச் சலவைகளை,சமூகத்திலிருந்து களைய முடியாமல் போனமை கவலையே.

ஏனைய மதங்களின் கொள்கைளுக்கு எதிராக, வன்முறைகளைப் பிரயோகிப்பது புனித “ஜிஹாத்”என்ற மூளைச்சலவைகள் இஸ்லாத்துக்குள் எப்போது புகுத்தப்பட்டன. அரபு, ஐரோப்பிய அரசியல்,இராணுவ, பொருளாதார நலன்களைக் குறிவைத்து ஒரு சில இஸ்லாமிய அமைப்புக்கள் ஆரம்பித்த போருக்கு சமூக அனுதாபம்,ஆதரவுகளைத் தேடுவதற்கான உபாயங்களாகவே இப்புதிய கருத்துக்களும் மூளைச்சலவைகளும், சில இறுக்கப்போக்குடைய இஸ்லாமிய அமைப்புக்களால் உள்வாங்கப்பட்டுள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.

இஸ்லாத்தில் பயங்கரவாதம் அனுமதிக்கப்பட்டுள்ளதான கருத்துக்கள் இறுக்கப்போக்குடையோரின் மனநிலையாகும்.இந்த அச்சமும் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின்ஆதங்கங்களில் வௌிப்பட்டன.

இஸ்லாமிய இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தீவிரவாதச் சிந்தனைகள் இஸ்லாத்துக்குள் புகுத்தப்படுவதைத் தடுப்பதற்கான தருணம் இதுதானென்பதை அவரின் கருத்துக்கள், எமக்குணர்த்தின. நெகிழ்வுத்தன்மைகளுக்கு அதிஉச்ச இடம் வழங்கியுள்ள இஸ்லாத்தில் இறுக்கப்போக்கிற்கு இடமில்லை. வுழு செய்வதற்கு நீர் இல்லா விட்டால் “தயமும்” செய்யலாம். நோயால் பீடிக்கப்பட்டு கடமைகளைத் தவறவிட்டவர் “கழாச்” செய்யலாம், பயணங்கள்,சிரமங்களில் தொழுகை உட்பட பிரதான கடமைகளை வேறு நேரத்தில் செய்யலாம். இந்நெகிழ்வுச் சிந்தனைகளை அடியொற்றி நாட்டின் இன்றைய நிலவரங்களில் இறுக்கமான அடிப்படைப் போக்கிலிருந்து நாம் விலகி நடப்பதே “இஸ்லாமோபியா” (பிழையான புரிதல் தவறான அச்சம்) என்பவற்றிலிருந்து ஏனைய சமூகத்தினரை விடுவிக்கும். எனவே கலாசார,தனித்துவ அடையாளங்களில் “பர்தா” புர்கா” போன்ற வௌிப்படையாகத் தெரிகின்ற, பிற சமூகங்களின் பார்வையில் சந்தேகங்களைக் கிளறும் ஆடைகளை எமது சகோதரிகள் தடுப்பதும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்புக்களாகவே உள்ளன. எம்மிலுள்ள எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் இதை செய்கின்றன.

பாதுகாப்புக் கெடுபிடிகளுள்ள காலத்திலும் பிறரை சந்தேகங்கொள்ளச் செய்யும் ஆடைகளை தவிர்க்க மறுப்பது,முஸ்லிம் சகோதரிகளை நெகிழ்வுப் போக்கில்லாத மதவாதிகளாகவே அடையாளப் படுத்தும்.இஸ்லாமிய இயக்கங்கள் பிற மதங்களுக்கு எதிரான இரகசியப் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றதா? அல்லது ஏனைய சமூகங்களுடன் சகோதரத்துவமாக வாழும் தலைமைத்துவ பயிற்சிகளை வழங்குகின்றதா? இவற்றை மாற்று மத சமூகத்தவர்களுக்கு தௌிவூட்டுவது முஸ்லிம் சிவில் சமூகம்,இஸ்லாமிய அமைப்புக்களின் பொறுப்பாகும்.

சுஐப் எம் காசிம்

Related posts

“கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்” கரையேற்றப் போவது யார்?

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்