சூடான செய்திகள் 1

தாமரை கோபுரத்தின் ரூ.02 பில்லியனிற்கு என்ன நடந்தது – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு தாமரைக் கோபுரம் சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் ஒன்றின் மூலம் இலங்கைக்கு கைநழுவிச் செல்லவிருந்த பெருந்தொகை பணத்தை நாட்டுக்கு மீதப்படுத்தி பொதுமக்களிடம் கையளிக்கப்படுகின்றது.

தாமரைக் கோபுர திட்டத்தின் உத்தேச மொத்த செலவு 19 பில்லியன் ரூபாவாகும். அந்த முழுத் தொகையையும் இலங்கை அரசாங்கத்திற்கு கடனாக வழங்குவதற்கு சீனாவின் EXIM வங்கி உடன்பட்டிருந்தது. அந்த உடன்பாட்டிற்கமைய இந்த நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் 2012.01.03ஆம் திகதி சீனாவின் CEIEC மற்றும் ALIT ஆகிய நிறுவனங்களுக்கும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைகுழுவிற்குமிடையே ஒரு முத்தரப்பு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரிய வந்ததாவது அவற்றில் ஒரு தரப்பான ALIT என்ற பெயரிலான நிறுவனம் குறித்து எந்தவொரு தகவலையும் கண்டறிய முடியாமல் இருந்தமையாகும். கௌரவ ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின்பேரில் இதுபற்றி பீஜிங் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக சீன அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ALIT நிறுவனம் பற்றி தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்யப்பட்டபோதும் அப்பெயரில் எந்தவொரு நிறுவனமும் சீனாவிலோ சீனாவிற்கு வெளியில் வேறு எந்தவொரு நாட்டிலுமோ கண்டறியப்படவில்லை. அந்நிறுவனத்திற்கான உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த முகவரியும் போலியானது என்பது பற்றி தகவல்கள் வெளியாகின.

இதேநேரம் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கம் 02 பில்லியன் ரூபாவை சீனாவின் ALIT நிறுவனத்திற்கு ஆரம்பமாக முற்பணமாக செலுத்தியிருந்தபோதும், அந்த 02 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்தவொரு அறிக்கையும் குறிப்பிடப்படவில்லை. அந்த வகையில் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தில் ஒரு தரப்பான ALIT என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருந்த நிறுவனம் நீக்கப்பட்டதுடன், அந்த நிகழ்வின் பின்னர் சீனாவின் EXIM வங்கி வழங்கி வந்த கடன் தொகை நிறுத்தப்பட்டது.

அதன் பெறுபேறாக சீனாவின் EXIM வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட 16 பில்லியன் கடன் 12 பில்லியன் ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டது. எனினும் அதுவரையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த அக்கடன் தொகைக்காக ஒவ்வொரு வருடமும் கடன் தவணைப் பணமாக 2400 மில்லியன் ரூபா அதாவது 240 கோடி ரூபா பணத்தை இலங்கை செலுத்தி வந்தது. 2018ஆம் ஆண்டுக்காகவும் இலங்கை அக்கடன் தவணைக்கான 240 கோடி ரூபாவை செலுத்தியுள்ளதுடன், அதனை இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு அவ்வாறே வருடாந்தம் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டுக்கான கடன் தவணை பணத்தில் முதலாவது அரையாண்டுக்கான 120 கோடி ரூபா தற்போது செலுத்தப்பட்டுள்ளது.

இத்தகையதொரு பின்னணியில் தாமரை கோபுர நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 04 பில்லியன் ரூபா பங்களிப்பை செலுத்தி பெருந்தொகை அந்நியச் செலாவணியை நாட்டில் மீதப்படுத்துவதற்கு பங்களிப்பை வழங்கியது.

அந்த வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரைக் கோபுரத்தின் அடித்தள பரப்பு 45 மீற்றர்களாகும் என்பதுடன், உயரம் 356 மீற்றர்களாகும். கோபுரத்தின் பிரதான அங்கமாக தொலைத்தொடர்பு உள்ளதுடன், கோபுரத்தின் மேற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள என்டனா 90 மீற்றர் உயரமானதாகும். இந்த டிஜிட்டல் என்டனா வடக்கே 60 கிலோமீற்றரும் தெற்கே 60 கிலோமீற்றரும் கிழக்கே 50 கிலோமீற்றரும் மேற்கே 15 கிலோமீற்றரும் செயலெல்லையை கொண்டதாகும். இதில் 20 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 50 எப்.எம் அலைவரிசைகளும் தொலைத்தொடர்பு செயற்பாட்டாளர்களுக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கோபுரத்தின் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப திட்டமிடல் 2008ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதுடன், 2012ஆம் ஆண்டு அதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. திட்டத்தின் தலைமை ஆலோசனை மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படுகின்றது. பொறியியல் துறை கொங்கிரீட் தொழிநுட்பம், உயர்ந்த கட்டிட நிர்மாணத்துறை மின் பொறியியல் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இலங்கை நிபுணர்கள், பொறியியலாளர்கள் 70க்கும் மேற்பட்டவர்கள் இதற்கு பங்களிப்பை வழங்கிவருவதுடன், அரச தனியார்துறை பல்கலைக்கழகங்களில் கல்விகற்றுவரும் நூற்றுக்கணக்கான பொறியியலாளர்கள், மாணவர்கள் களப் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பையும் இது ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

-ஜனாதிபதி ஊடக அறிக்கை-

Related posts

பெண்காதி விடயத்தில் அடம்பிடிக்கும் றவூப் ஹக்கீம் : இஸ்லாமிய வழிமுறையை ஏற்க வேண்டும் – ஐக்கிய‌ காங்கிர‌ஸ்

புறக்கோட்டை – மெனிங் சந்தையில்-நாட்டாமிகள் பணிப்புறக்கணிப்பு

ஐ.கே மஹாநாம,பீ.திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்