(UTVNEWS|COLOMBO) – ஆடுகளம் நுழைந்து அடித்தாடுவதை நான் சுதந்திரம் என்று சொல்லவில்லை. தமது மனதை சீரான முறையில் வைத்துக் கொண்டு ஓட்டங்களைக் குவிப்பது அல்லது பந்து வீசுவதைத் தான் நான் சுதந்திரம் என்று சொன்னேன் என திமுத் கருணாரத்ன கூறியுள்ளார்.
அணித் தலைவராக அனைத்து வீரர்களுக்கும் அதிகளவு சுதந்திரம் வழங்குகின்றீர்கள் என நிரோஷன் டிக்வெல்ல கூறியிருந்த கருத்துக்கே திமுத் இவ்வாறு கூறியுள்ளார்.
போட்டியில் எப்போதும் எமது மனதை ஒருநிலைப்படுத்தி தன்னம்பிக்கையோடு விளையாட வேண்டும். அதற்காக ஆடுகளத்தில் நுழைந்து முகங்கொடுக்கின்ற எல்லா பந்துகளுக்கும் ஓட்டங்களைக் குவிக்க வேண்டும் என்பதை நான் இங்கு சொல்லவில்லை.
எனவே, அணித் தவைராக நான் வழங்குகின்ற சுதந்திரத்தை முடிந்தளவு பயன்படுத்த வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியை எடுத்துக் கொண்டால் ஒருசில இடங்களில் எமது வீரர்கள் பொறுமையுடன் விளையாடவில்லை. எனவே, விட்ட தவறுகள் குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, ஒருசில வீரர்களுக்கு அணியில் நிறைய சுதந்திரம் கொடுத்தும், சிறப்பாக விளையாடவில்லை என்றால் அவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் இறுதி முடிவொன்றை எடுக்க வேண்டிவரும். குறிப்பாக, நிறைய வீரர்கள் அந்த இடத்திற்கு வந்து விளையாடுவதற்கு தயாராக உள்ளனர் என திமுத் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.