அரசியல்உள்நாடு

153 ஆசனங்களை வைத்திருந்த மஹிந்த இன்று மூன்று ஆசனத்தை வைத்திருக்கிறார் – நாம் கவலைக்கொள்ள தேவையில்லை – ஜீவன் தொண்டமான் எம்.பி

“அரை மனதுடன் நூறு அங்கத்தவர்கள் இருப்பதைவிட, முழு மனதுடன் பத்து அங்கத்தவர்கள் என்னுடன் இருந்தால் நான் கட்சியை மீள உறுதியாக கட்டியெழுப்புவேன் என ஜீவன் தொண்டமான். தெரிவித்தார்.

உடபுஸ்ஸல்லாவ, கோணகலை மற்றும் ராகல ஆகிய காரியாலயங்களுக்கு உட்பட்ட இ.தொ.காவின் மாவட்டத் தலைவர், தலைவி மற்றும் தோட்டக்கமிட்டி தலைவர், தலைவிகளுடனான சந்திப்பானது நேற்று (23) சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும், ராகல சானிகா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இ.தொ.கா வுக்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

அதேபோல், எதிர்வரும் காலங்களில் இ.தொ.காவின் வளர்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எவ்வாறு செயற்படுவது அதன் மூலமாக எவ்வாறான வெற்றியினை பெற்றுக்கொள்வது என்பது பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், பிரதி தலைவர் கணபதி கணகராஜ், முன்னாள் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ், காரியால உத்தியோகத்தர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்ததைப்போல் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள இருக்கின்றோம்.

இம் மாற்றங்களினூடாகவே தொடர்ந்து செயற்பட தயார்நிலையில் இருக்கின்றோம். இதுவே காலத்தின் தேவைப்பாடும் ஆகும்.

இ.தொ.காவின் பொதுச்செயலாளர் என்ற பதவி அங்கீகாரமானது இ.தொ.காட்சியின் ஸ்தாபனத்தை மற்றும் சின்னத்தை பாதுகாக்க வேண்டும் அதேபோல் மலையகத்தையும் பாதுகாக்க வேண்டும். எனவே தான் நாம் நன்கு சிந்தித்து தனித்துவத்தை பாதுகாக்க வேண்டும்.

அதே நேரம் பாராளுமன்ற ஆசனத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாரிய நோக்கத்துடனே நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் யானை சின்னத்தை தேர்ந்தெடுத்தோம்.

மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளும் தனது மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொண்டது.

நாமும் இரண்டு ஆசனங்களை பெற்றுக்கொண்டோம். அது தற்போது ஒரு ஆசனம் ஆகியது. அதற்கு காரணம் எமது ஆளுமை இன்மை அல்ல. சிலரின் சூழ்ச்சி ஆகும் இதை நாம் அனைவரும் நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்.

இதனை நினைத்து நாம் கவலைக்கொள்ள தேவையில்லை.

அத்தோடு ஆறு உறுப்பினர்களை வென்றெடுத்த மலையக கட்சி தற்போது இரண்டு உறுப்பினர்களையே தன்வசமாக்கி நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருக்கின்றார்கள்.

அதேபோல் சஜித் பிரேமதாச அவர்கள் 60 உறுப்பினர்கள் வைத்திருந்தவர் தற்போது 35 ஆசனங்களை வென்றெடுத்து கவலை இன்றி எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்து இருக்கிறார்.

இவை அனைத்தும் சரி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 153 ஆசனங்களை வைத்திருந்தவர் இன்று மூன்று ஆசனத்தை வைத்திருக்கிறார்.

இவர்களே இவ்வாறு செயற்படும் போது நாம் நடந்தவையை நினைத்து கவலைக்கொள்ளாமல் எதிர்க்காலத்தினை நோக்கிய பயணத்தை வெற்றிக்கொள்வோம்.

இறந்து போன யானைக்கு 53 நாட்களில் உயிர் கொடுத்து இருக்கிறோம். இதை நினைத்து நாம் பெருமை கொள்ள வேண்டும். இதைவிடுத்து நாம் கவலை கொள்ள தேவையில்லை.

159 ஆசனங்களை பெற்று அரசாங்கத்தை ஆளும் ஜனாதிபதி கூறி இருக்கின்றார் “மலையகத்தை மாற்றுவோம்” என்று எனவே நாம் அந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

-செ.திவாகரன்

Related posts

இன்றும் மழையுடனான காலநிலை

நாமல் ராஜபக்ஷவின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் – ஒருவர் காயம்

editor

நிலக்கரி ஒப்பந்தம் அமைச்சரவையால் இரத்து