உள்நாடு

150 கோடி ரூபாய் நிதி மோசடி – இந்தியாவில் தஞ்சமடைந்த குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்

திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் இன்று(26) இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களுடன் இந்த தம்பதியின் 13 வயது மகனும் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை சென்றனர்.

இந்த விவகாரத்தில் தங்களை வலுக்கட்டாயமாக இலங்கைக்கு அனுப்புவதாக, ஊடகவியலாளர்களிடம் பேசிய அப்பெண் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் தனிப்பிரிவில் அதுகுறித்து முறையிட்டும் சட்டவிரோதமாக இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார், அப்பெண்ணின் வழக்கறிஞர்.

இலங்கையில் இவர்கள் மீது பல நூறு கோடி ரூபாய் நிதி மோசடிப் புகார் உள்ளதால், உரிய நடைமுறைகளின்படியே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

திருச்சி முகாமில் உள்ள இந்த தம்பதி மீது இலங்கையில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு என்ன?

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி இரவு 11 மணியளவில் கடலோர பாதுகாப்புப் படை ஆய்வாளர் செல்வராசு, கோடியக்கரை பஸ் நிலையத்தில் சிறுவனுடன் ஒரு தம்பதி இருப்பதைப் பார்த்துள்ளார். அவர்களிடம் விசாரித்த போது, இலங்கையில் இருந்து படகு மூலமாக தமிழ்நாட்டுக்கு வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

‘உரிய அனுமதியில்லாமல் இலங்கையில் இருந்து வந்துள்ளனர். 1967 ஆம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டப்பிரிவு 12(1)(c)-ன்படி அவர்கள் கைது செய்யப்பட்டனர்’ என வேதாரண்யம் காவல்நிலைய ஆய்வாளர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் முஹம்மது ஷிஹாப் – பாத்திமா பர்சானா மார்க்கர் தம்பதியர் ஆவர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த காவலர்கள், அவர்களின் பத்து வயது மகனை நாகையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர்.

இந்த வழக்கில் இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவித்த தம்பதி, திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தனித்தனியாக அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இலங்கையில் அத்தம்பதிக்கு எதிராக நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்களை தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக, இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்பாக டிச. 25 அன்று ஊடகவியலாளர்களிடம் பேசினார், பாத்திமா பர்சானா மார்க்கர்.

இதன் பின்னணியில் தங்கள் மீது இலங்கையில் நிதி மோசடிப் புகார் ஒன்று நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்புவில் பிரிவெல்த் குளோபல் (Privelth Global) என்ற நிதி நிறுவனம், இஸ்லாமிய சட்டப்படி செயல்படுவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் வைப்புத் தொகையைப் பெற்று வந்ததாகவும், பொதுமக்களிடம் இருந்து சுமார் 150 கோடி இலங்கை ரூபாய் வைப்புத் தொகையைப் பெற்று மோசடி செய்ததாகவும் இலங்கை நாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் கிழக்கு மாகாணம், கல்முனையில் உள்ள பிரிவெல்த் குளோபல் நிறுவனத்தின் கிளையில் இந்த மோசடி நடந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக முஹம்மது ஷிஹாப் என்பவரும் இயக்குநராக அவரது மனைவியும் உள்ளனர்.

அந்த வகையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் மீது காவல்துறையில் வழக்குப் பதிவாகியுள்ளது. கல்முனை நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஷிகாப், அவரது மனைவி மற்றும் மகன் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

இதனை அறிந்து தம்பதியை இலங்கைக்கு வரவழைக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது.

தங்கள் மீது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாக வழக்குப் பதிவாகியுள்ளதாக கூறும் பாத்திமா, “கொழும்பில் எங்களுக்கு இருந்த ஒரே வீட்டையும் சிலர் அபகரித்துவிட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் திருச்சி முகாமில் பாத்திமாவை சந்தித்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், சில நாட்களில் அவர்களை இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

“அதற்கான உத்தரவை அவர் காட்டிய போது, ‘எங்களால் இலங்கைக்கு செல்ல முடியாது. அங்கே எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்றேன். அவர் எனது குறைகளைக் கேட்கவில்லை” என்கிறார் பாத்திமா.

“இந்த வழக்கு முடிவுக்கு வர வேண்டும் என்பது இலங்கை அரசின் நோக்கமாக உள்ளது. வங்கிக் கணக்கு உள்பட அனைத்து ஆவணங்களையும் அரசு ஆய்வு செய்யட்டும். எங்கள் மூலமாக பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை.” எனக் கூறுகிறார் பாத்திமா.

தங்களை இலங்கைக்கு அனுப்பும் முயற்சி நடப்பதை அறிந்து, தமிழக அரசின் தனிப்பிரிவுக்கு பாத்திமாவின் கணவர் முஹம்மது ஷிஹாப் முகாமில் இருந்து மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி அனுப்பப்பட்ட அந்த மனுவில், தங்களால் இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியாத காரணங்களை அவர் பட்டியலிட்டுள்ளார்.

இதற்கு அதே ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதியன்று தமிழ்நாடு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் பதில் அளித்துள்ளார். அதில், ‘முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் விருப்பத்தின்படியே இலங்கை செல்ல வழிவகை செய்யப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஆணையர் இவ்வாறு கூறினாலும் சட்டவிரோதமாக ஷிஹாப் தம்பதியை இலங்கைக்கு அனுப்ப உள்ளனர். இலங்கை செல்வதற்கு அவர்கள் விருப்பப்படவில்லை” என்கிறார், பாத்திமாவின் வழக்கறிஞர்.

ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர்,

” இந்தியா, இலங்கைக்கு இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உள்ளது. இலங்கை அரசுக்கு இவர்கள் தேவை என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தால் மட்டுமே இவர்களை அனுப்ப முடியும்” என்கிறார்.

“ஆனால் அப்படி எந்த முயற்சிகளும் நடக்கவில்லை” எனக் கூறும் சட்டத்தரணி புகழேந்தி, ” நிதி மோசடிப் புகார் என்பதால் வெளிநாடுகளில் இவர்களுக்கு அடைக்கலம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்களுக்கு விருப்பம் இல்லாதபோது, இலங்கைக்கு அனுப்புவது சரியானதல்ல” என்கிறார்.

குற்ற விசாரணைக்காக ஒருவரை தங்கள் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால், அவர் ஏன் தங்கள் நாட்டுக்குத் தேவைப்படுகிறார் என்பதற்கான ஆவணங்களுடன் அந்நாட்டு வெளியுறவுத் துறை இந்திய அரசை அணுக வேண்டும் என்றும் அதை அடிப்படையாக வைத்து இங்குள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதற்கான உத்தரவைப் பெற வேண்டும் என்றும் சட்டத்தரணி புகழேந்தி குறிப்பிடுகிறார்.

ஆனால், ஷிஹாப் தம்பதி வழக்கில் இவை எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதால் சட்டவிரோதமாக அவர்களை அங்கு அனுப்புவதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.

ஆனால், பாத்திமாவின் குற்றச்சாட்டுகளை திருச்சி சிறப்பு முகாமின் சிறப்பு துணை ஆட்சியர் நஜிமுன்னிஷா முற்றிலும் மறுக்கிறார்.

ஊடகங்களுக்கு பேசிய அவர், “தமிழ்நாட்டுக்குள் அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்தது தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துவிட்டது.

புழல் சிறையில் இருந்து அவர்கள் வெளியில் வந்த உடன் சிறப்பு முகாமில் வைத்திருப்பது வழக்கம். தற்போது தமிழக அரசிடம் இருந்து உத்தரவு வந்ததால் அதன் அடிப்படையில் அவர்களை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்கிறார்.

தம்பதியை அனுப்புமாறு கோரி பாஸ்போர்ட் மற்றும் பயண டிக்கெட்டை இலங்கை தூதரகம் அனுப்பியுள்ளதாக கூறும் நஜிமுன்னிஷா , “இலங்கை அரசு கேட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி அநுரவின் நத்தார் தின வாழ்த்துச் செய்தி

editor

SLFP சுயாதீனமாக செயற்பட தீர்மானம்

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்