(UTV|COLOMBO)- நேற்று ஆரம்பமான 15ஆவது உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஏகப்பட்ட தவறுகளுக்கு மத்தியில் ஸிம்பாப்வேயிடம் 30 கோல்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.
இந்த போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக அரங்கில் நடைபெற்றது.
போட்டியின் பின்னர் கருத்து தெரிவித்த இலங்கை அணித் தலைவி சத்துரங்கி ஜயசூரிய அவ்வப்போது விட்ட தவறுகளே காரணம் போட்டியின் தோல்விக்கு காரணம், ஸிம்பாப்வே அணியுடன் சிறபபாக விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடனேயே நாங்கள் இப் போட்டியை எதிர்கொண்டோம். எனினும் நேருக்கு நேர் மோதும் போது கடுமையாக போராட வேண்டும். எவ்வாறாயினும் பந்து பரிமாற்றங்களில் நாங்கள் பல சந்தர்ப்பங்களில் தவறுகளை இழைத்தோம். கோல் போடுவதிலும் அவ்வப்போது தவறுகளை விட்டோம். எங்களது உயரத்தை அனுகூலமாகக் கொண்டு நாங்கள் திறமையை வெளிப்படுத்த முயற்சித்தோம். ஆனால், அவ்வப்போது விட்ட தவறுகளால் ஆட்டம் கைநழுவிப்போனது என்றார்.
16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் இப் போட்டியில் ஸிம்பாப்வே 79 க்கு 49 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. இதே குழுவில் இடம்பெறும் நடப்பு சமபியன் அவுஸ்திரேலியா தனது ஆரம்பப் போட்டியில் 88 க்கு 24 என்ற கோல்கள் அடிப்படையில் வட அயர்லாந்தை மிக இலகுவாக வெற்றிகொண்டது.