ஓமான் வளைகுடா கடல் பிராந்தியத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கடல் கண்ணி தாக்குதலில் அந்தக் கப்பல்கள் பலத்த சேதத்துக்கு ஆளாகி உள்ளன. இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள் அந்த வழியாக வந்த நோர்வே மற்றும் ஜப்பானிய கப்பல்களில் இருந்தவர்களால் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானெ காரணம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ நேரடியாகக் குற்றம் சாட்டி உள்ளார் . இந்தத் தாக்குதலுக்குப் பாவிக்கப்பட்டுள்ள ஆயுதங்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவவுக்கு அவர் வந்துள்ளதாக மைக் பெம்பியோ கூறினார்.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டு எந்தவிதமான ஆதாரமும் அற்றது. இந்தச் சம்பவத்துக்கும் ஈரானுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று ஈரானியர் உயஅதிகாரி ஒருவர் மறுத்துள்ளார்.
இந்த விடயத்தை மறுத்து ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள ஈரானிய ராஜதந்திர அலுவலகமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்த மறுப்பு வெளியாகிய ஒரு சில மணிநேரத்தில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து வெடிக்காத நிலையில் உள்ள ஒரு கண்ணிவெடியை ஈரானின் புரட்சிக் காவல் படையினர் அகற்றும் விடியோ காட்சிகளை அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் வெளியிட்டுள்ளது.