கட்டுரைகள்

கூட்டுப்பலமே கடும்போக்கிற்கு வேட்டு

(UTV|COLOMBO) பௌத்த நாடு என்ற வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு வழிகாட்டும் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பௌத்த உயர் பீடங்களின் பணிகளை ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுள்ளன.

இப்பணிகளையும் தாண்டி, அரசியலைத் தீர்மானிக்கின்ற ஆட்சிக்கு வரவேண்டிய கட்சிகளைத் தெரிவு செய்கின்ற, பொறுப்புக்களையும் இவ்வுயரிய பௌத்த பீடங்கள் பொறுப்
பேற்றுள்ளனவா என்ற அச்சம் இலங்கை மீதான வெளிநாடுகளின் பார்வையிலும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த மதகுரு ஒருவர் அரசியல் நிகழ்ச்சிக்காக அனுஷ்டித்த உண்ணாவிரதத்தை, மல்வத்தை, அஸ்கிரிய உயர்பீடங்கள் கையாண்ட முறைகளும் பௌத்த மேலாதிக்கத்தை அரசியலில் திணிப்பதற்கான மறைமுக அனுமதியாகவே சிறுபான்மைத் தலைவர்களால் நோக்கப்படுகிறது.

எந்த அரசியலையும் சாராத மதகுருவால் இந்த உண்ணாவிரதம் அரங்கேற்றப்பட்டிருந்தால், தேரரின் நியாயங்களை நிறைவேற்றுமாறு கோரப்பட்டதில் முஸ்லிம்கள் தெளிவடைந்திருப்பர்.

மாறாக அதிகாரத்திலிருந்து துரத்தப்பட்டோர் பின்னாலிருந்து இயக்கிய, இந்நாடகத்தில் தலையிடுவதற்கான தேவை ஏன் எழுந்தது? என்ற சந்தேகமே முஸ்லிம்களின் இதயங்களை ஆற்றுப்படுத்த முடியாமலிருக்கிறது.

இத்தனைக்கும் மேலாக.சில தேரர்களின் வெறுப்பூட்டும் சித்தாந்தங்கள்,தனிப்பட்ட நடத்தைகளை நிராகரித்து நாட்டின் உயர் தலைவர்கள் ஒரு வார்த்தையாவது வெளியிடாதமையும் சிறுபான்மையினரின் நம்பிக்கையில் இடைவெளியைப் புகுத்தியுள்ளது.

முஸ்லிம் அமைச்சர்களை பிரதமரோ, ஜனாதிபதியோ தைரியமூட்டியிருக்கலாம். எனினும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீது பேரினவாதப்பாய்ச்சல் ஏற்படாதென்ற நம்பிக்கையை, இவர்கள் விதைக்கவில்லையே! இருபது பேர் செய்த ஈனச்செயலுக்காக இருபது இலட்சம் முஸ்லிம்களையும் ஏப்பமிடத் துடித்த கடும்போக்கின் இனவெறிப்பசிக்கு ஜனநாயக, வடிகானூடாக வழியைக் காட்டவில்லையே! என்ற எமது சமூகத்தின் ஏக்கத்துக்கு விடை காணவே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

ஒரு புறத்தில் சமூகத்துக்கு எதிரான நெருக்கடிகளைக் களைய முடியாத அதிகாரங்கள் இருந்தென்ன? தொலைந்தென்ன? என்ற கோணத்திலும் இப்பதவி துறத்தல்களைப் பார்க்க முடியும். இப்போது பதவியை ஏற்குமாறு மகாநாயக்க தேரர்கள் அழைப்பு விடுத்தாலும் உடனடியாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் முஸ்லிம்கள் இல்லை. இந்த அழைப்பில் இன்னுமொரு பார்வையும் உள்ளது. தனிப்பட்ட சிலரின் நிகழ்ச்சி நிரலுக்காக ஒரு சமூகம் ஒட்டு மொத்தமாகப் பழிவாங்கப்படுவதை மகாசங்கத்தினர் ஏற்கவில்லை என்பதே அது. அச்சத்தில் உறைந்திருந்த முஸ்லிம் தாய்மார், சகோதரிகளுக்கு பௌத்த உயர்பீடங்களின் அழைப்பு ஆறுதலளித்தாலும் சிங்கள சகோதரர்களுக்கு இன்னும் சில நியாயங்களைப் புரிய வைப்பற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.

தமது சமூகப் பிரதிநிதிகள் சிலர் மீதான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளைக் கண்டறிதல், சிறையிலடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்கு உறுதியளித்தல், வெறுப்பூட்டும் பேச்சுக்களில் பௌத்த தேரர்கள் ஈடுபடாதிருப்பதற்கான வரையறைகளை வகுத்தல் என்பவையே அது.

இலங்கை மீதான இனவாதப் பார்வைகளை சர்வதேச தரத்திலிருந்து இல்லாதொழிக்கவும் இந்நகர்வுகள் உதவும். சிறையிலிருந்து வெளியான தேரரின் பகிரங்க அறிவிப்பு ஒரு சில அமைச்சர்களுக்காக, முழு முஸ்லிம் சமூகத்தையும், அவர்களது சொத்துக்களையும் சூறையாட திருவிழாவுக்கு அழைத்திருந்தது. இந்த இனவாதக் குரல் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி, எந்தச் சட்ட திட்டங்களுக்கும் அஞ்சாமல் ஒலித்ததால், ஜனநாயக நாடுகளின் புருவங்கள் உயர்ந்தது மட்டுமன்றி எமது தேசத்தின் கீர்த்தியிலும் கறை விழத் தொடங்கியது. இவற்றைப் போக்க வேண்டிய தேவைகள் அரசுக்கு உள்ளதைப் போன்றே, பௌத்த உயர் பீடங்களுக்கும் உள்ளது.

தாய் நாட்டையே நேசித்து வரும் வரலாறுகளுக்குச் சொந்தக்காரர்களான முஸ்லிம்களுக்கும் இந்தப்பணியிலிருந்து ஓரமாக முடியாது. வரலாறு நெடுகிலும் பதிவாகி வரும் முஸ்லிம்களின் தேசாபிமானத்துக்கு இந்நாட்டிலுள்ள கடும்போக்கர்களால் கௌரவம் வழங்கப்படவில்லை என்பதற்காக,எமது கண்களை நாமாகவே குத்திக் கொள்வதா? எனினும் எங்களைப் பிறர் புரிய வேண்டும் என்பதற்கான கால இடைவெளிகள் இன்றைய நாட்களில் அவசியமாகியுள்ளது.

முஸ்லிம் அமைச்சர்களின் பதவி விலகல்களால் எழுந்துள்ள நெருக்கடிகளை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மொட்டு அணியினர், ஒரு சிலரைப் பாதுகாக்க ஒட்டு மொத்த அமைச்சர்களும் பதவி துறந்ததை, குற்றவாளிகளை சமூக அடையாளத்துக்குள் மறைக்கும் முயற்சி என்கின்றனர். பயங்கரவாதிகளை முஸ்லிம் சமூகத்துடன் இணைத்து முடிச்சுப் போடும் முயற்சிகளுக்கு எதிரானதே, இந்தப் பதவி விலகல் என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

முஸ்லிம் தலைவர்களிடத்தில் இன்று ஏற்பட்டுள்ள ஒற்றுமை எமது,தாய்மார்கள் முந்தானை ஏந்தி நாளாந்தம் பிரார்த்தித்ததற்கான பிரதிபலன்களாகியுள்ளன. எம்மை விளங்காத சக்திகள் அல்லது விளங்க மறுக்கின்ற கடும்போக்கர்கள், உண்மையான தேசப்பற்றால் ஈர்க்கப்படும் வரை அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த நாம் தெரிவு செய்யும் அரசுகள் முன்வரும் வரை, அஞ்சியும் வாழாது, கெஞ்சியும் போகாதிருப்பதே பொருத்தமான போக்காக இருக்கப் போகிறது.

-சுஐப் எம் காசிம் –

Related posts

கருத்துக்களம் : ரிஷாட் மீது, ஏன் இந்த வன்மம்..?

அதிகாரச்சமரின் ஆடுகளங்கள்

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாஷைகள்