(UTV|COLOMBO) ஆபரணங்களுக்கு தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை கட்டாயமாக்குவதற்கும் அந்த முத்திரையின்றி ஆபரணங்களை விற்பனை செய்யும் ஆபரண விற்பனை நிலையங்களை சுற்றி வளைத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (22) முற்பகல் தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின்போதே இது பற்றி கவனம் செலுத்தப்பட்டது. இத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் நேற்று முற்பகல் கொள்ளுபிட்டியிலுள்ள தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபைக்கு சென்ற ஜனாதிபதி, அதன் பணிகளை பார்வையிட்டதுடன், பணிக்குழாமினருடன் முன்னேற்ற மீளாய்வு கூட்டமொன்றிலும் கலந்துகொண்டார்.
மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே, பணிப்பாளர் நாயகம் எச்.பி.சுமணசேகர உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
தரச் சான்றிதழ் இல்லாத ஆபரண விற்பனை சந்தையில் பரவலாக இடம்பெறுவதன் காரணமாக ஆபரணங்களை விற்பனை செய்கின்றபோது தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தரச் சான்றிதழ் முத்திரையை பெற்றுக்கொள்வதை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தரச் சான்றிதழை பெற்றுக்கொள்வது குறித்து அனைத்து ஆபரண விற்பனையாளர்களையும் அறிவூட்டுவதற்கும் ஆபரணங்களை கொள்வனவு செய்கின்றபோது கவனமாக இருப்பது குறித்து பொதுமக்களை தெளிவூட்ட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். விரைவில் குறித்த சட்ட திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.