கட்டுரைகள்

“கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்” கரையேற்றப் போவது யார்?

(UTV|COLOMBO) கண்டி, திகன சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட மற்றொரு சமூகச் சூறையாடல்களை நேரடிக் களம் சென்று கண்ட எமது கண்கள்,மனிதாபிமானம் எங்கிருக்கும் என்பதைத் தேடி அலைந்தன. குருநாகல் மாவட்டத்தின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களும் அச்சத்தால் உறைந்து அமைதி சூழ்ந்திருந்த அந்த இரவில்,சூறையாடப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின் வீடுகள்,கடைகள், சொத்துக்கள் அடித்து நொருக்கப்பட்ட பள்ளிவாசல்கள்,மத்ரஸாக்களின் அலங்கோலக்

 

காட்சிகளுக்குள் சொத்துக்களை இழந்த ஒவ்வொரு முஸ்லிம்களின் பெருமூச்சுக்களும் மெல்லிய இரைச்சலுடன் ஓசையிட்டுக் கொண்டிருந்தன. இந்த ஓசைகளை ஊடறுத்துக் கொண்டு சென்ற அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் வாகனங்களில் நாம்

 

மினுவாங்கொடைக்குச் சென்றோம்.அவ்வூர் முஸ்லிம்களின் செல்வச் செழிப்புக்கு அடையாளமாக நிமிர்ந்து நின்ற ஜவுளிக் கடைகள், ஆடம்பர ஹோட்டல்கள்,பள்ளிவாசல்கள் அனைத்தும் தரையில் சிதறிக்கிடந்தமை மிகப்பெரிய ஊழித்தாண்டவத்தை நினைவூட்டியது.மிகச் சுதந்திரமான மன நிலையிலிருந்தவர்களே இவ்வாறு திட்டமிட்டு கணக்கிட்டு  இவற்றைக் குறிவைத்திருப்பர்.இவை நடந்து முடிந்த பின்னர்தான் மினுவாங்கொடைப் பள்ளிவாசலுக்கு முன்னால் பீரங்கிகள் நிறுத்தி வைக்கப்பட்டு காவல் பணிகளும் உஷாராக்கப் பட்டிருந்தன.எல்லாம் முடிந்த பின்னர் எதற்காக இந்தக் காவல்.

 

ஏன் இந்த  நாட்டில் முஸ்லிம்கள் அடிக்கடி அச்சுறுத்தப்படுகி ன்றனர்.ஒரு சிலரின் செயற்பாடுகளுக்கு ஒட்டு மொத்த சமூகமும் எவ்வாறு பொறுப்புக் கூற முடியும்.  சரவதேச பயங்கரவாதத்தின் பங்கில் முஸ்லிம்களுக்கு ஒரு துளியும்பங்கில்லை என்பதை இவர்கள் புரிய மறுப்பது ஏன். தொடர்ச்சியான பொறுமையைக் கோழைத் தனமாகக் கொண்டதன் எதிரெலிகளா இவை எங்களுக்குள் நாங்கள் நொந்து கொண்டோம்.

 

இந்த நோவினைகள் நிரந்திரமாகி சிங்கள- முஸ்லிம் உறவுகளில் இடைவெளியை ஏற்படுத்துமா? என்ற வேதனையுடன் கொட்டாரமுல்லை  கிரமாத்திற்குச் சென்றோம். கிராமத்தின் மருங்கிலிருந்த முஸ்லிம்களின் 4 வீடுகள் அடித்து நொருக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டு அங்கு ஆரவாரம் செய்த கும்பல், அந்த வீடுகளில் ஒன்றுக்குள் உயிர்ப்பிச்சைக்காக அடைக்கலம் தேடி ஒழிந்திருந்த 4 பிள்ளைகளின் தந்தையான பெளசுல் அமீர்டீன் என்பவரை வாளால் வெட்டி, சித்திரவதை செய்து அவரது உயிரை பறித்தெடுத்த துற்பாக்கிய சம்பவத்தை கேள்வியுற்றோம்.

 

இதயமுள்ள அனைவரையும் கிரங்கடித்த இந்த சம்பவத்தில் ஊர் மக்கள் ஒடுங்கி இருக்க அவரது ஜனாஸா உயிரின் உறவினர் வீடொன்றில் கொண்டுவரப்பட்டிருந்தது. ஜனாஸா வீட்டுக்குச் சென்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் புருவங்கலை விழித்து பதில்  ஏதுமின்றி மெளனித்திருந்தார்.  அவருடன் சென்றிருந்த அகில இலங்கை மக்கள காங்கிரஸின் முக்கியஸ்தர்களான இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கட்சியின் முக்கியஸ்தர் ஹுசைன் பைலா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மதுல்லாஹ், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.என்.நசீர்  உட்பட முக்கியஸ்தர்கள் மிகவும் ஆழ்ந்த கவலையுடன் அங்கிருந்தனர்.

 

அந்த வேளையில், ஜனாஸாவுக்கு மரியாதை செலுத்த  அந்த பிரதேசத்தின் முக்கிய மதகுருவான மாகல் கடவ்வெல புண்ணியசார நாயக்க தேரரும் வந்திருந்தார். இதன் போது, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அளவாவிய அவர் சிங்கள-முஸ்லிம்களின் உறவுகள் தொடர்பில் மிகவும் தெளிவான கருத்துக்களை முன்வைத்தார். அத்துடன் அங்கு குழுமி இருந்த ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த அவர். “அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எனக்கு நீண்ட காலமாக தெரியும். நான் வவுனியாவில் இருந்த போது அவரது மக்கள் பணிகளை நேரடியாக கண்டிருக்கின்றேன். இன மத பேதமின்றி உதவி செய்து வருபவர் போலிக்காரணங்களை கூறியும் ஆதாரமில்லாத வீண் விமர்சனங்களை செய்தும் அவர் மீதான குற்றாச்சாட்டுக்களை வேண்டுமென்றே சுமத்துகின்ற்னர் அவரை சிலர் வேண்டுமென்றே ஓரங்கட்ட கட்ட நினைப்பது  வேதனையானது.” என்று  தெரிவித்தார்.

 

இந்த நம்பிக்கையுடன் கொட்டம்பிட்டிய கிராமம் நோக்கி நகர்ந்தன எமது வாகனங்கள்.

 

அங்கு வீடுகள்,வாசல்கள், உடைத்து நொறுக்கப்பட்டு ஏதிலிகளாக்கப்பட்டு கண்ணீர் சிந்தியவாறு நின்ற முஸ்லிம் தாய்மார்கள், பொறுமையுடன் விம்மி அழுத சகோதரிகள்,பொறுமையிழந்து ஆத்திரத்தின் எல்லைக்கே சென்றிருந்த இளைஞர்கள்,அனைத்தையும் இழந்துவிட்ட விரக்தி நிலையில் கிடந்த தந்தையர்கள் அனைவருடனும் அளவளாவினோம்.திட்டமிட்டு நடத்தப்பட்ட இவ்வெறித்தனங்கள் வௌியிடங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட இளைஞர்களால் நடாத்தப்பட்டதென ஊரவர்கள் ஊர்ஜிதம் செய்ததிலிருந்து ஒன்றைப்புரிந்து கொள்ள முடிந்தது.ஒட்டு மொத்த சிங்கள சகோதரர்களின் சிந்தனைகளில் இந்த வன்முறைகள் இல்லையென்பதே அது.காவலுக்கு நின்ற பாதுகாப்புபடையின, கட்டிவைக்கப்பட்ட பொம்மைகளாகப் பார்த்து நிற்க பள்ளிவாசல்களும், மத்ரஸாக்களும் தரை மட்டமாக்கப்பட்டிருந்ததும், பள்ளிவாசல்களின் சிசிடி கமராக்கள் சீருடை அணிந்த சிலரால் எடுத்துச் செல்லப்பட்டதும் காடையர்களைக் காப்பாற்றும் முயற்சிகளாக இருந்ததாகவே,அவ்வூர் மக்கள் குமுறினர்.ஒரு வகையில் பழிவாங்கும் தாக்குதல்களாகவும் இதை ஏற்க முடியாது.தேவாலயங்களில் தமது உறவுகளை இழந்த கிறிஸ்தவ சகோதரர்கள் செய்திருந்தால் பதிலீடு அல்லது பழிவாங்கல் தாக்குதல்களாக இதைக் கருதலாம்.இரு நூறு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள், பஸ்களில் வந்த வாலிபர்கள்,வேன்டிப்பர் ரக வாகனங்களில் கத்திகள்,பொல்லுகள்,வாள்களுடன் வீர வசனங்களும்,வெறுப்புக் கோஷங்களும் வெறுப்பூட்டும் வார்த்தைகளுடனும் வந்த காடையர் பட்டாளத்தால் குருநாகல் மாவட்டத்தின் சுமார் 32 முஸ்லிம் கிராமங்கள் துவம்சம் செய்யப்பட்டன.

 

கொட்டாம்பபிட்டிய மத்ரஸதுல் அல்ஜமாலியா அரபுக்கல்லூரி எரிக்கப்பட்டு மாணவர்களின் விடுதிகளிலிருந்த அத்தனை பொருட்களும் இழுத்து வரப்பட்டு எரிக்கப்பட்டன. ரமழான் மாத விடுமுறையில் மாணவர்கள் வீடு சென்றிருந்ததால் பலரின் உயிர்கள் காப்பற்றப் பட்டிருந்தமை அவ்வூர் மக்களுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.சில கிராமங்களில் பள்ளிவாசல்களுக்குள் நுழைந்த இவர்கள், சிறுநீர் கழித்து மத வெறியைத் தீர்த்துள்ளனர்.இன்னும் சில பள்ளிவாசல்களில் கண்ணாடிகள், அலுமாரிகள், தளபாடங்களை உடைத்தும் வெறி அடங்காத இக்கும்பல் புனித குர்ஆன்பிரதிகளை ஒன்று திரட்டி எரித்து விட்டு வௌியேறுகையில் தாக்குதலில் தப்பியிருந்த பள்ளிவாசலின் எஞ்சியிருந்த ஒரேயொரு சொத்தான சுவர்க் கடிகாரத்தையும் உடைத்து நொருக்கியதன் மனநிலைகள் எவ்வளவு பயங்கரமானது,எத்தனை விகாரமானது. இவ்வாறானோருக்குப் புனர்வாழ்வளிப்பதே அரசின் முதற் தேவையாக இருக்குமோ என நான் நினைத்துக் கொண்டேன். எத்தனை பள்ளிவாசல்கள் தகர்க்கப்பட்டதோ அவை எதிலிருந்தும் ஒரு வாளாவது இருக்கவில்லை.அங்கு உடைக்கப்பட்ட சகல மத்ரஸாக்களிலும் சமயலறைப் பொருட்கள் தவிர எந்த ஆயுதங்களும் அகப்படவில்லை.

 

இம்மாவட்டத்தைப் பொறுத்த வரை இக்கிராமங்களிலுள்ள அத்தனை முஸ்லிம்களும் நாளாந்த தொழிலாளிகள்,அன்றாட உழைப்பாளிகள்.பழங்கள்,காய்,கறிகளை விற்பனை செய்வதற்காக வீதியோரங்களில் கட்டப்பட்டிருந்த இம்மக்களின் கொட்டகைகளும் எரியூட்டப்பட்டு குப்புறக்கிடந்தமை இவர்களின் வாழ்க்கையும் வீழ்த்தப்பட்டதற்கான சாட்சிகளாக காட்சியளித்தன.

 

அங்கு கண்ட அத்தனை காட்சிகளும் ஒரு சமூகத்தின் திட்டமிட்ட சூறையாடலுக்கான சாட்சிகளாகத் தென்பட்டன. புனித நோன்பு காலமாகையால் இப்தார் (நோன்பு துறத்தல்) வேலைகளுக்கான ஆயத்தங்களைச் செய்யும் வேளையிலே இந்த அக்கிரமங்கள் நடத்தப்பட்டது.தூக்கிய பிள்ளைகளோடும், காய்ச்சிய கஞ்சி,ஆக்கிய சோறுகளைக் கையில் தூக்கிக் கொண்டு ஓடிய பலர்,குழந்தைகளைத் தூக்கியவாறு தடுக்கி விழுந்து தட்டுத்தடுமாறிய தாய்மார் எனப் பலதரப்பினரும் அபயம் தேடி காடுகள்,குளங்கள்,வயல்களுக்குள் பதுங்கிக் கிடந்ததால் சகல கிராமங்களும் வெறிச்சோடின. ஆனால் இன வெறியர்களின் இரைச்சல்கள் மாத்திரம் காதுகளைத் துளைத்து அச்சத்தை அதிகரித்ததாகவும் அம்மக்கள் கூறினர்.இந்தப் பிரதேசத்தில் இன்னுமொரு பள்ளிவாசலை உடைக்க வருவதாகக் கேள்வியுற்ற மௌலவி ஒருவர் மாரடைப்பு வந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் எமக்குச் சொல்லப்பட்டது. முஸ்லிம்களைக் காப்பாற்ற அரசாங்கம் தவறியதா? அல்லது அமைதியைப் பேணும் பொறுமை ஏவிவிடப்பட்ட இளைஞர்களிடம் இருக்கவில்லையா என்ற சிந்தனையில் சகலரும் பெருமூச்சு விட்டவாறு பண்டுவஸ் நுவரப் பகுதிக்குச் சென்றபோது எங்களை இருள் கவ்விக் கொள்வதற்கு முன்னர் பயம் பற்றிக் கொண்டது.

 

நிலைமைகளைப் பார்வையிட்ட அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கண்கள் குளமாகியதை அவதானித்த பெண்கள் முந்தானைகளால் கண்களைத் துடைத்துக் கொண்டு எங்களை யார் பாதுகாப்பது? இதற்குப் பின்னர் இவ்வாறு நடைபெறாதென்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற தொனியில் நோக்கினர்.அனைவரையும் பொறுமையாக இருக்குமாறும் நெருக்கடி நிலைகளில் நிதானம் அவசியமென்றும் ஆறுதல் கூறிய அமைச்சர்,சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் உறவுகள் இவ்வாறான வன்முறைகளால் தகர்ந்து போகாமல் பாதுகாப்பது அவசியமெனத் தெரிவித்தார்.இஸ்லாத்தில் இல்லாத ஒன்றுக்காக ஒரு சிலர் செய்த பயங்கரவாதச் செயலுக்கு எதிலும் சம்பந்தப்படாத முஸ்லிம் ஏழைக் கிராமங்கள் இலக்கு வைக்கப்பட்டமைக்குப் பின்னால் எந்தச் சக்திகள் உள்ளதென்பதை ஆராயும் மனநிலையில் அப்பாவி முஸ்லிம்கள் இல்லை. ஆனால் எறும்பு புற்று கட்டுவதைப் போல் கடின உழைப்பால் கட்டப்பட்ட வீடுகள்,கடைகள்

 

தகர்க்கப்பட்ட ஏக்கத்தில் இன்னும் எத்தனை நாட்களுக்கு வாழ்நாளைக் கழிக்கப் போகின்றனர் என்பதே அடுத்த சவாலாக இருக்கப் போகிறது.

சுஐப் எம். காசிம்

 

 

 

Related posts

அஷ்ரஃபின் ஆளுமைகளுக்குள் முஸ்லிம்களின் அபிலாஷைகள்

போர்க்களங்களை திரும்பிப் பார்க்கும் இக்பால் அத்தாஸின் பதில்கள்; பலவந்த வெளியேற்றம் பழிவாங்கலா? பாதுகாப்பா?

புத்தளம் போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி: அறுவைக்காட்டுக்கும், வில்பத்துவுக்கும் முடிச்சுப்போட இனவாதிகள் சூழ்ச்சி…