(UTV|INDIA) ஆரம்ப கட்டத்தில் கால்ஷீட் பிரச்சினை, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார், இயக்குனர் தேடல் என கலாட்டாவுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் படம் நல்லபடியாக நடந்து முடிந்து யூ சான்றிதழுடன் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. ஞானவேல் ராஜா தயாரிக்க, எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹிப் ஆப் ஆதி இசை அமைத்திருக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இதில் நடித்ததுபற்றி சிவகார்த்திகேயன் கூறும்போது,’மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரித்திருக்கும் ஞானவேல் ராஜாவிடம் பேசியபோதுதான் அவர் எவ்வளவு பிரச்னையில் சிக்கியிருக்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
சிக்கலான நேரத்தில் நான் நடித்துக் கொடுத்தது பற்றி மேடையிலேயே வெளிப்படையாக குறிப்பிட்டார். அதுபோன்ற உண்மையை நிறையபேர் சொல்வதில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தை எனக்கு அமைத்து கொடுத்தவர் இயக்குனர் எம்.ராஜேஷ். அந்த நன்றிக்காக இல்லை. அவரது இயக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசையும் இப்படத்தில் நிறைவேறியிருக்கிறது. நான் நடித்த வேலைக்காரன் படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார்.
திறமையான நடிகையான அவருக்கு அப்படத்தில் நடிப்பதற்கு போதிய வாய்ப்பு தரப்படவில்லை என்ற கவலை என் மனதில் இருந்தது. அந்த குறை இப்படத்தில் தீர்க்கப்பட்டிருக்கிறது. ஹீரோயினாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். அவரை தவிர வேறு யாரும் இந்தளவுக்கு அந்த பாத்திரத்தை செய்ய முடியாது.