(UTV|DUBAI) உலகின் மிகப்பெரிய பிரேமாக ‘துபாய் பிரேம்’ தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்வக வடிவிலான பிரமாண்ட புகைப்பட சட்டம்போல ‘துபாய் பிரேம்’ என்ற கட்டுமானம் உள்ளது. 25 கோடி திர்ஹாம் செலவில் 492 அடி உயரமும், 305 அடி அகலமும் கொண்டதாக உருவாக்கப்பட்டது.
தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு புகைப்பட சட்டத்திற்குள் துபாய் நகரம் உள்ளதுபோல தெரியும். இது இரும்பு தளவாடங்கள் மற்றும் கான்கிரீட் போன்றவற்றால் முப்பரிமாண பிரதியெடுக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது.
மேற்புறத்தில் தங்கநிற உலோக தகடுகளால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் உட்புறம் மற்றும் மேற்புறம் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட கண்ணாடிகளால் சூழப்பட்ட நடைமேடையும், இருபுறங்களில் ‘லிப்ட்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதன் உச்சியில் நின்று 360 டிகிரி கோணத்தில் துபாய் நகரின் அழகை ரசிக்க முடியும். கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 1ம் திகதி திறக்கப்பட்ட துபாய் பிரேமை ஒரே நேரத்தில் 200 பேர் பார்வையிடலாம். ‘துபாய் பிரேம்’ கட்டுமானம் போல உலகில் பிரமாண்டமான பிரேம் எங்கும் உருவாக்கப்படவில்லை. எனவே உலகின் மிகப்பெரிய பிரேமாக ‘துபாய் பிரேம்’ தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.