சூடான செய்திகள் 1

”ஓமான் – இலங்கை வர்த்தக உறவுகள் தொடர்பில், பேச்சு நடத்திய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடு திரும்பினார்”

(UTV|COLOMBO) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஓமான் சென்றிருந்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (07) காலை நாடு திரும்பினார். அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் ஓமானுக்குச் சென்றிருந்த உயர் மட்ட அமைச்சர்கள் குழுவில் அமைச்சர்களான கபீர் காசீம், மலிக் சமரவீர ஆகியோரும் இணைந்திருந்தனர். கடந்த 05ஆம், 06ஆம் திகதிகளில் ஓமானில் இடம்பெற்ற பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும், பேச்சு வார்த்தைகளிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்கள் குழு ஓமான் நாட்டில் கடந்த 05ஆம் திகதி  சோஹார் சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் அதனுடன் இணைந்த துறைமுகத்தை பார்வையிட்டிருந்ததுடன் அதே நாள் லிவா பிளாஸ்டிக் கைத்தொழில் வலயத்தையும் பார்வையிட்டிருந்தனர்.

பின்னர், அடுத்த நாள் 06ஆம் திகதி அமைச்சர்கள் குழுவினர் ஓமானிய பெற்றோலிய மற்றும் எரிவாயு அமைச்சர் அலி மசூட் அல் சுனைதி, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் முல்ஹாம் அல்-ஜாப், அரச பொது ஒதுக்கீடு நிதியத்தின் பிரதான முதலீட்டு அதிகாரி டாக்டர். முகம்மட் ரும்கி, ஆகியோருடனும்  பேச்சுவார்த்தை நடத்தினர். எண்ணெய் சுத்திகரிப்பு தொடர்பாகவும் அரச வருமானங்கள் தொடர்பிலும் இவ்விரு நாடுகளின் பிரதிநிதிகளும் பரஸ்பர அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

ஓமானிய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அலி மசூட் அல் சுனைதியுடனான சந்திப்பின் போது இலங்கைக்கும் ஓமானுக்கு இடையிலான ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இறுதிக் கட்ட பேச்சுக்களை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நடத்தினார். இந்த சந்திப்பின் போது, கூட்டு ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பான முன்மொழிவுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் ஓமானிய அமைச்சர் வலியுறுத்தினார். அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்தான சட்ட வரைபுகளும் ஆலோசிக்கப்பட்டன.

கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஓமானிய பெற்றோலிய மற்றும் எரிவாயு அமைச்சர் டாக்டர். முகம்மட். முகம்மட் ரும்கி கொழும்பில் மார்ச் மாதம் 23ஆம் திகதி இலங்கை அமைச்சர்களுடன் நடத்திய சந்திப்பின் பின்னரேயே, அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், மலிக் சமரவீர, கபீர் காசீம் ஆகியோர் ஓமானுக்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு

 

 

 

Related posts

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

இலங்கையில் பாரிய கட்டுமான நடைமுறைகளை வலுப்படுத்த தாய்லாந்தின் சியாம் சிமெந்து நிறுவனம் ஒன்றிணைந்துள்ளது

வத்தளை துப்பாக்கிச்சூடு சம்பவம்-விசாரணை செய்ய 4 விஷேட பொலிஸ் குழுக்கள்