வகைப்படுத்தப்படாத

346 பேர் உயிரிழந்தமைக்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரினார்

அண்மையில் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட விமான விபத்துகளில் 346 பேர் உயிரிழந்ததற்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனத்தின் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த மாதம் எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த ஒக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்திருந்தனர்.

அடுத்தடுத்து விபத்து நேரிட்டு ஏராளமானோர் உயிரிழந்ததால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. விமான பாதுகாப்பு குறித்து பயணிகளுக்கு முழு உத்தரவாதமும் நம்பிக்கையும் அளிக்கும் பொருட்டு உலகம் முழுவதும் தனது மேக்ஸ் ரக விமானத்தின் இயக்கத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தது. பின்னர் விமான விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிந்து, விமான பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டது.

இந்நிலையில், நடந்த சம்பவத்திற்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி டென்னிஸ் மிலன்பர்க் (Dennis Muilenburg) மன்னிப்பு கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போயிங் 737 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டதற்கு போயிங் சார்பில் மன்னிப்பு கோருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு விபத்துகளிலும் என்ன நடந்தது? என்பது குறித்த முழு விவரங்களும், அரசு அதிகாரிகள் விரைவில் வெளியிட உள்ள இறுதி அறிக்கையில் வெளியாகும் என்றும் டென்னிஸ் மிலன்பர்க் கூறியுள்ளார்.

எத்தியோப்பிய விபத்து குறித்து அரசு தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்ட நிலையில், போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

குகுலே கங்கை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு

ஆர்ப்பாட்டம் காரணமாக வீதிக்கு பூட்டு

கட்டாருக்கும் – வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ராஜதந்திர உறவு விரிசலுக்கு தாமே காரணம்