சூடான செய்திகள் 1

அமைச்சர் றிஷாட் உரை — ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்…

(UTV|COLOMBO) இந்த நாட்டின் ஆட்சி மாற்றம் நடைபெறுவதற்கு ஊடகவியலாளர்களின் பங்கு மிகப்பிரதானமானதாகும். அதேபோல் இந்த ஆட்சியை தொலைக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள் செயற்படுகின்றார்கள் ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகசேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு சம்மேளனத்தின் தலைவர் கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நேற்று முன்தினம் (31.03.2019) மாலை கல்முனை ஆஷாத் பிளாசா மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி,பிரதியமைச்சர் பாலிததேவபெரும, பாராளுமன்ற உறுப்பினர்களான சிறியானி விஜயவிக்ரம, ஏ.எல்.எம்.நஸீர், கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், கே.எம்.அப்துல் றசாக் உட்பட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், நிறுவனத்தலைவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த சின்ன நாட்டில் ஆட்சி மாற்றங்கள் நடைபெறுகின்றபோது பொருளாதார அபிவிருத்தி உட்பட பல இன்னல்கள் நடைபெற வாய்புள்ளன.அதனால் எதிர்காலம் சிறப்பாக அமையுமா என்ற கேள்வியும் என் முன்னால் உள்ளது.

ஊடகவியலாளர்களிடத்தில் தர்மம் இருந்தாலும் ஊடகத்தில் தர்மம் இருக்க வேண்டும் இரண்டும் சமாந்திரமாக இருக்கும் போதுதான் இந்த நாட்டில் சமாதானம், சகவாழ்வு, சமத்துவம், பொருளாதாரம் சரியாக அமையப்பெறும். சில ஊடகவியலாளர்கள் தங்களது மனச்சாட்சிப்படி செய்திகளை எழுதுவதற்கும் வாசிப்பதற்கும், பேசுவதற்கும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதையும் நாங்கள் காண்கின்றோம்.

இந்த நாட்டில் 30, 40 வருடங்கள் யுத்தம் நடைபெற்றுள்ளன இன்றும் இதன் வடுகள் மாறவில்லை இந்த யுத்தத்தினால் தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லிம் , சிங்கள மக்களும் பாதிப்படைந்துள்ளனர். யுத்தத்திற்கான காரணம் என்னவென்று தேடிப்பார்க்கின்றபோது அங்கே சில அரசியல் தலைமைத்துவங்கள் விட்ட தவறுகளால்தான் அல்லது சில அரசியல் தலைமைத்துவங்கள் கண்டு கொள்ளாத காரணங்களால்தான் பாரிய யுத்தம் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளது.இதன் பாதிப்பினால் இன்றும் இந்த நாடு மிக மோசமான நிலையில் உள்ளது.

அதுமட்டுமல்ல பொருளாதார ரீதியாகவும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.அந்த வகையில் இன்னுமொரு சமூதாயத்தை அண்மைக்காலமாக சீண்டிப்பார்க்கும் அராஜக நிலையைத் தோற்றிவித்துள்ளனர்.பல வகையிலும் சீண்டுகின்றனர் நாங்கள் இன்னும் பொறுமையாகவுள்ளோம்.

இன்று நாட்டில் குறிப்பிட்ட சிலர் இனவாதத்தை தூக்கிப் பிடிக்கின்றனர். வில்பத்து என்ற இடத்தில் 1990ம் ஆண்டுக்கு முன் எமது முஸ்லிம் மக்கள் வாழ்ந்தனர். அவர்களது இடத்தில் மீள்குடியேற்றம் இடம்பெறும் போதுதான் காடுகளை அழிக்கின்றோம் என்று எனக்கெதிரான பொய்ப்பிரச்சாரங்களை சொல்லி வருகின்றனர்.

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் எனக்கெதிராகப் போராட்டம் நடாத்தினார்கள். எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தில் பட்டதாரிகளாக உயர் பதவி வகிப்பவராக வரவுள்ள இச்சந்ததியினர் மத்தியில் நஞ்சை ஊட்டுகின்ற அநாகரீகமான கலாசாரம் இந்த நாட்டில் யுத்தத்திற்குப் பின்னர் திணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாங்கள் முகங்கொடுக்க அச்சப்பட வேண்டிய தேவை கிடையாது. ஒரு பொய்யை வைத்துக்கொண்டு நமக்கெதிராகக் கட்டவிழ்த்து நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்பார்களாக இருந்தால் அதனை நாங்கள் செய்வோமாக இருந்தால் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறான பிரச்சனைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் முகங்கொடுத்து வருகின்றது. நாங்கள் எங்கள் பிள்ளைகளை நல்ல மார்க்க கல்வியோடு நல்ல ஒழுக்கத்தோடு வளர்த்துக்கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

நமக்கு முன்னாலிருக்கின்ற சவால்கள் நாங்கள் செய்யாத தவறு செய்ததாக திணிக்கின்றார்கள். எங்களை அநியாயமாக வம்புக்கிழுக்கின்றார்கள். எங்கள் மார்க்கம் சொத்துக்கள் எங்கள் மீதும் எதிர்காலத்தின் மீதும் கை வைத்து எங்களைச் சீண்டுகின்ற அநாகரீகமான செயல் தொடர்ந்து திட்டமிட்டு நடந்து கொண்டிருக்கின்றது.

இதற்குப் பின்னால் சில சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதனைத்தடுத்து சவால்களுக்கு முகங்கொடுக்கின்ற நல்ல கலாசாரம் ஒழுக்கமுள்ள சக்தியுள்ள நேர்மையுள்ள அறிவுள்ள ஆற்றலுள்ள சமுதாயத்தை வளர்தெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு நமக்கிருக்கின்றது.

இதுவிடயத்தில் ஊடவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஊடகத்தர்மத்தைப் பேணிச் செயற்பட வேண்டும் என்றார்.

 

(எம்.ஐ.எம்.றியாஸ்)

 

 

 

 

Related posts

தொடரூந்து தொழிற்சங்கத்தின் அதிரடி எச்சரிக்கை

தெரிவிக் குழு உறுப்பினர்கள் விபரம் – சபாநாயகர் தெரிவிப்பு

களுகங்கை நீர்த்தேக்கத்தில் மங்கள நீர் நிரப்பல் விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது