அரசியல்உள்நாடு

13ஆவது திருத்தத்தை எதிர்க்க பொதுஜன பெரமுனவுக்குஉரிமை இல்லை – நிமல் லன்சா.

(UTV | கொழும்பு) –

 

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தார்மீக உரிமை இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் , அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : 13க்கு அப்பால் அதிகாரப் பகிர்வு பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.

13ஆவது திருத்தம் தற்போதும் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அனைத்து அரசியல் கட்சிகளினதும் கருத்துகளைப் பெற்று நாட்டின் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வை தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும் போது , பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் அதற்கு எதிராக கருத்து வெளியிட்டதன் மூலம் நாட்டின் முன் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை தெளிவாகக் காண்பித்துள்ளது. ஸ்திரமான பொருளாதாரத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அனைத்து மக்களுக்கும் இடையில் சமாதானமும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

நாட்டு மக்கள் அனைவர் மத்தியிலும் நம்பிக்கையை வளர்க்கும் வகையில், அனைவரும் ஏற்கும் வகையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் பங்களிக்க முடியும்.
அப்போது சகல மக்கள் மத்தியிலும் இலங்கையர் என்ற உணர்வு கட்டியெழுப்பப்படும். அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு அதிகாரப் பகிர்வை வழங்குவதன் மூலம் சர்வதேச நம்பிக்கையையும் கட்டியெழுப்ப முடியும்.
இது தொடர்பான புரிதல் சிறிதளவும் இன்றி ,பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாட்டுக்கும், மனசாட்சிக்கமைய செயற்படும் பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்களது நிலைப்பாட்டுக்கும் முரணான கருத்தை பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எந்த அடிப்படையில் தெரிவிக்கின்றார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளரொருவர் களமிறக்கப்படுவார் என்று அக்கட்சியின் சிறு தரப்பினர் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். முடிந்தால் பொதுஜன பெரமுனவில் களமிறக்கப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அக்கட்சியிலிருந்து வேட்பாளரொருவரை களமிறக்கும் என்றும் , அதற்காக மூன்றெழுத்து பெயர் கொண்ட தலைவரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் குறிப்புக்களை வழங்கி மக்களை ஏமாற்றி வருகின்றது.
முடிந்தால் சகல தரப்பினரதும் இணக்கப்பாட்டுக்கமைய பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்குமாறு சவால் விடுக்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற நிலைமையால் தோன்றிய நெருக்கடிகளிலிருந்தும் ,நாட்டை மீளக் கட்டியெழுப்பி பொருளாதார ,சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திக் கொடுத்த தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்கள் ,மக்கள் ஆணையற்ற பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்களுக்கு மறந்து போயுள்ளது. மீண்டும் அவர்கள் தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தை மறந்து அந்த கட்சியின் சில உறுப்பினர்கள் செயற்படுகின்றமை கவலைக்குரியதாகும். நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமின்மை மற்றும் நெருக்கடிகளை தீர்த்து நாட்டில் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பக்கூடிய ஒரே தலைமைத்துவமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு காணப்பட்ட ஒரேயொரு தெரிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே.

இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளைத் தீர்த்து சர்வதேசத்தின் ஆதரவுடன் நாட்டைக் கட்டியெழுப்பி பொருளாதார, சமூக, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது நாட்டு மக்கள் மத்தியில் நம்பிக்கைக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. முற்போக்கான பார்வையுடனும் , சர்வதேசத்தின் ஒத்துழைப்புடனும் இலங்கையை மீண்டும் முன்னோக்கிக் கொண்டு செல்லக் கூடிய இயலுமை கொண்ட ஒரேயொரு தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே. இது தொடர்பில் பரந்துபட்ட புரிந்துணர்வு கொண்ட பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்கு பாடுபடுவார்கள். மக்கள் ஆணையற்ற சிலரின் கருத்துக்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பார் என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் இலஞ்ச ஆணைக்குழுவில்

ராஜிதவுக்கு கொவிட் தொற்று உறுதி

சுகாதாரத்துறைக்கு அதிரடி சட்டங்களை விதித்து ஜனாதிபதி உத்தரவு!