(UTV|COLOMBO) சமுகத்திற்கு பிரச்சினைகளும் ஆபத்துகளும் ஏற்பட்ட பின்னரே, அவசர அவசரமாக கூடி தீர்வை தேடுவதும் கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் என்ற வாடிக்கையை நாம் மாற்றி, நிரந்தரமான பொறிமுறை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது காலத்தின் தேவை என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இறக்காமத்தைச் சேர்ந்த லரீப் சுலைமான் எழுதிய ‘திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள்’ நூல் வெளியீட்டு விழாவில் (30) ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்…
இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான் எம்.பி உட்பட கிண்ணியா ஜம் இய்யதுல் உலமா, மஜ்லிசுஸ் சூரா பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
அவர் மேலும் கூறியதாவது மனித உரிமை விடயங்களில் சகோதர தமிழ் மக்கள் காட்டுகின்ற அக்கறையும் ஆர்வமும் நமது சமூகத்திடம் குறைவு ஜெனீவா கூட்டத்தொடர் காலங்களில் தமிழ் மக்கள் சார்ந்த சிவில் அமைப்புக்களும் சமூக ஆர்வலர்களும் அந்த நாட்டிற்கு சென்று தங்கியிருந்து தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிராக நீதிக்குரல் எழுப்புகின்றனர்.
நமது சமூகத்திற்கு நடந்த அநியாயங்கள், அட்டூழியங்கள் காணி கபளீகரங்கள், இனவாத செயற்பாடுகள் எவற்றையும் எவருமே குறைத்து மதிப்பிட முடியாது எனினும் நாம் இந்த அநியாயங்களை சர்வதேச மயப்படுத்துவதில் பாராமுகமாக இருக்கிறோம்.
பிரபாகரன் வடக்கில் இருந்து எங்களை துரத்தினார். இருபது வருடங்களுக்கு மேலாக அகதியாக வாழ்ந்த நாம், சமாதான சூழலை அடுத்து மீண்டும் அங்கு சென்று குடியேறுவதற்கு இனவாத மதகுருமார் தடையாக இருக்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு எதோ ஒரு பின்னணியில் செயற்படுகின்றனர். தினமும் அவர்களின் அநியாயங்கள் எல்லை மீறி வருகினறன. சொந்த காணியில் குடியேறிய எமது நிலத்தை, வில்பத்துக்கு சொந்தம் என கூறி,அபாண்டங்களை பரப்புவதுடன் மீள் குடியேற்றத்திற்கு முன்னின்று உதவி செய்வதனால் என்னையும் துன்பப்படுத்துகின்றனர். பத்து லட்சம் பேரின் கையெப்பங்களை திரட்டி வருவதுடன் அப்பாவி இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்து நாடளாவிய ரீதியில் நகரங்களில், எனக்கெதிராக கொடும்பாவி எரித்து இனவாதத்தை கக்குகின்றனர்.
திருமலை மாவட்டத்தில் அரிசி மலையில் காணி விவகாரம் 6 வருடங்களாக வழக்கில் இருப்பதாக இங்கு கூறப்பட்டது அதேபோன்றே, புத்தளம்-இலவங்குளப்பாதையை எட்டுவருடத்திற்கு முன்னர் திறந்து வைத்தோம் எனினும் இனவாதிகள் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றதனால் பாதை மூடப்பட்டு, இன்னும் நீதிமன்றப்படிகளில் ஏறிஇறங்கி வருகின்றோம். இவ்வாறான இழி செயற்பாடுகளில் ஈடுபடும் இந்த இனவாதிகளுக்கும் இனவாத மதகுருமார்களுக்கும் சட்டமும் ஒழுங்கும் விதிவிலக்காகி உள்ளமை கவலையளிக்கிறது. ஆட்சியாளர்கள் பயந்தவர்களாக இவர்களின் நடவடிக்கைகளை பிழை என்று சொல்ல முடியாதவர்களாக, வாயில்லாத பூச்சிகளாக மாறியுள்ளனர்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடந்த ஒவ்வெரு சம்பவமும் வலிந்து திணிக்கப்பட்டவையே! இறைமையை பாதுகாத்த ஒரு சமூகத்தை வேண்டும் என்றே வம்புக்கு இழுத்து, அவர்களின் உயிரைப் போக்கி, உடமைகளை நாசமாக்கி அவர்களை இல்லாதொழிப்பதே இவர்களின் முக்கிய குறிக்கோள். எனவே தான் இவர்கள் இவ்வாறான சதிகார நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
எமக்கெதிராக எத்தனையோ அராஜகங்கள் கட்டவிழ்க்க பட்ட போதும் நாம் பொறுமை காத்தோம். சட்டத்தையும் யாப்பையும் மதித்தோம். எமது இளைஞர்கள் பொறுமை இழந்து எதிர் நடவடிக்கைக்காக துடியாய்த் துடித்த போதும் அவர்களை அமைதிப்படுத்தினோம். யக பாலன இதுதானா??? என அவர்கள் கேள்வி எழுப்பி கிளர்ந்தெழுந்த போதும் இஸ்லாமிய வழிமுறைகளை பின்பற்றுமாறு கெஞ்சிக்கேட்டோம். நாம் யாருக்கெதிராகவும் ஆயுதம் ஏந்தாத சமூகம். பள்ளியை உடைத்தமைக்காக பதிலுக்கு எதையுமே உடைக்காதவர்கள். கட்சிகள் மற்றும் அரசியல் கொள்கைகளால் வேறுபட்டு இருந்த போதும் இஸ்லாமிய போதனைகளுக்கு அடிபணிந்து ஒற்றுமை பேணி நாட்டை நேசித்தவர்கள். எனவே எம்மை இன்னும் இன்னும் சீண்டி சமூக முரண்பாடுகளுக்கு வித்திட வேண்டாம் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.
-ஊடகப்பிரிவு-