சூடான செய்திகள் 1

கொழும்புடன் நேரடி விமான சேவையை மேற்கொள்ள காபூல் விருப்பம்!

(UTV|COLOMBO) “இலங்கையுடன் நேரடி விமான சேவை ஒன்றை நடத்த ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது”. ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஸ்ரப் ஹைதாரி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்த போதே இந்த அழைப்பை விடுத்ததோடு இலங்கையுடன் முதலீட்டு பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு (INVESTMENT,PROTECTION AND PROMOTION-IPP) ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கும் விருப்பம் வெளியிட்டுள்ளது.

“இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் தனது அயல் நட்புறவு நாடுகளுடனும் பிராந்தியத்திற்கு அப்பாலும் விமான சேவையை நடாத்தி உள்ளூர் உற்பத்தி பொருட்களை எடுத்து சென்றது. இதன் விளைவாக 2018 ஆம் ஆண்டு 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உற்பத்திப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதே போன்று இலங்கை உடனும் புதிய நேரடி விமான சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு நாங்கள் விரும்புகின்றோம். இந்த விமான சேவையானது கடந்த காலங்களை போன்று டில்லி , மும்பை வழியாக செல்லாமல் நேரடியாக காபூலில் இருந்து கொழும்புக்கு தரையிறங்கும் வகையில் நடத்தப்படல் வேண்டும்”. என்றும் ஆப்கானிஸ்தான் தூதுவர் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(15) நடை பெற்ற இந்த சந்திப்பின் போது ஆப்கானிஸ்தான் தூதுவர் மேலும் தெரிவித்ததாவது,

“உத்தேச விமான சேவை ஆரம்பிக்கப்பட்டால் விசேட குறைந்த தீர்வையை வழங்குவதற்கும் தரையிறங்குவதற்கான உரிமையை வழங்குவதற்கும் ஆப்கானிஸ்தான் தயாராக இருக்கின்றது.” என அவர் தெரிவித்தார். காபூலை தளமாக கொண்ட விமான சேவைகளான அரியானா ஆப்கான் எயார் லைன்ஸ், காம் எயாஆகிய விமானங்கள் கொழும்புக்கு பறப்பதற்கு தயாராக இருக்கின்றது” எனவும் அவர் தெரிவித்தார்.

“ஆப்கானிஸ்தானில் நிலக்கீழ் சுரங்கத்தில் ட்ரில்லியன் பெறுமதியான உலோகங்கள் , இரும்பு, செம்பு ,தங்கம் ,போன்ற கனிமங்கள் உட்பட எண்ணெய் வாயு போன்றவையும் காணப்படுகின்றன.சர்வதேச பல்தேசிய நிறுவனங்களுடனான இந்த பொருட்களின் வர்த்தகம் அதிக செலவுடையதாக இருப்பதால், நாடுகளுடனான நேரடி வியாபாரம் பரஸ்பர நாடுகளுக்கு பயன் தரக்கூடியது” என்றும் தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது ,

ஆப்கானிஸ்தானுடனான ஏற்றுமதி நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுமதியாளர்கள் திறம்பட செய்தால், ஆப்கானிஸ்தானின் புதிய சந்தைகளில் பிரமாண்டமான வர்த்தக வாய்ப்புகளை இலங்கை ஏற்படுத்த முடியுமெனவும் இலங்கை கம்பனிகள் ஆப்கானிஸ்தான் சுரங்க கனிம இருப்புக்களை அகழ்வதற்கான சந்தர்ப்பமும் ஏற்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுடனான இலங்கையின் மொத்த வர்த்தகம் 1மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவானதாக அதாவது 820 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதி கொண்டதாக இருந்தது. அதே போல் இலங்கையின் ஏற்றுமதியானது 2016 ஆம் ஆண்டில் இருந்த 630 ஆயிரம் அமெரிக்க டொலரை விட சற்று அதிகரித்து 700ஆயிரம் அமெரிக்க டொலராகியது.

“அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் , செய்தி தாள்கள் , அச்சு உற்பத்தி பொருட்கள் ஆகியவையே காபூலுக்கான பிரதான ஏற்றுமதி பொருட்களாக இருந்தது. அதாவது இலங்கையின் ஏற்றுமதி 68சதவீதமாகவும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கான இறக்குமதி புறக்கணிக்கத்தக்கதாகவும் இருந்தது” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

 

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

மஹிந்தவை தோற்கடித்த சக்தி எது? மஹிந்த சொல்லும் கதை

இடியுடன் கூடிய மழை

பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு கூறியதாக தெரிவிக்கப்படும் செய்தி பொய்யானது…