சூடான செய்திகள் 1

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (06) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று காலை 09 .30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று பாராளுமன்றம் கூடவுள்ளது.

மக்களை வலுவூட்டுதல், வறிய மக்களைப் பாதுகாத்தல், என்டர்பிரைசஸ் ஶ்ரீலங்கா எனும் தொனிப்பொருளில் வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நேற்று (05) பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.

இந்தநிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 13 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி மாலை வரவு செலவுத்திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நடப்பு ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைவாக காணப்படுகின்றது.

இந்தத் தடவை வரவு செலவுத்திட்டத்திற்கு அமைய, அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,464 பில்லியன் ரூபாவாகும்.

அரசாங்கத்தின் இந்த வருட செலவு 3,149 பில்லியன் ரூபாவாகும்.

அதற்கமைய, 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகை 685 பில்லியன் ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த வருடம் கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காக மாத்திரம் 913 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் மொத்த வருமானம் நிகர தேசிய உற்பத்தியில் 15.8 வீதமாக உயர்வடைந்துள்ளது.

அரசாங்கத்தின் மொத்த செலவு நிகர தேசிய உற்பத்தியில் 20.2 வீதமாகும்.

நிகர தேசிய உற்பத்தியில் 4.4 வீதமாக வரவு செலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகை காணப்படுகின்றது.

கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடுகையில் படிப்படியாக இது வீழ்ச்சியடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

Related posts

அமைச்சர் ரிசாத்தின் பணிப்புரைக்கமைய முள்ளியவளை மக்களின் பிரச்சினைகள் ஆராய்வு

மருத்துவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிக்க அனுமதி

பாராளுமன்றம் நாளை(19) பகல் வரை ஒத்திவைப்பு