சூடான செய்திகள் 1

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

(UTV|COLOMBO) ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்து அரசாங்கத்தை தக்க வைக்கச்செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தை எவரும் எளிதாக மறந்து செயற்பட முடியாதென்று அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக அவர் (01) கலந்து கொண்டு உரையாற்றும் போது மேலும் கூறியதாவது,

மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் 2015 ஆம் ஆண்டில் குதித்த போது , மூடியிருந்த கதவை நாங்கள் திறந்து விட்டதானாலேயே அவருக்கு ஆதரவு பெருகி, வெற்றி பெற்றார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியா? மஹிந்தவா? என்று பெரிய பிரளயம் கிளம்பியிருந்த போது நாம் என்ன முடிவை எடுக்கப்போகின்றோம் என எல்லோரும் அப்போது எதிர்பார்த்திருந்தனர். “நாம் போக மாட்டோம்” என அடித்து கூறியவர்களுக்கு நாம் எடுத்த தீர்க்கமான முடிவு மரண அடியாக மாறியது.

அதே போன்று ஜனாதிபதி மைத்திரி அண்மையில் மேற்கொண்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளின் போதும், நாம் அவருக்கு ஆதரவளிப்போமென பலர் எண்ணினர் . எனினும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நாம் எடுத்த முடிவு அவரது முயற்சிகளை பாழாக்கியது.

ஜனாதிபதி தேர்தலின் போது “நாம் வந்ததனாலேயே அவர் வெற்றி பெற்றார்”. இப்போது “நாம் வராததனாலேயே அவரது முயற்சிகள் தோல்வியுற்றன”. இதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் உணர்த்தி இருக்கின்றோம். கோடிகளுக்கும் பதவிகளுக்கும் விலை பேசப்பட்ட போதும் நாம் எதற்கும் அசைந்து கொடுக்க வில்லை .

தற்போதைய அரசியல் சூழல் இடியப்பச்சிக்கலாகவும் , கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்த பிரதமர் யார் ? எவரது கையில் இனி வரும் ஆட்சி? என்று தீர்மானிக்கும் காலம் நெருங்கி வருகின்றது.

கடந்த காலங்களில் வன்னியில் உதித்த எமது கட்சியானது ஆட்சியை தீர்மானிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருந்தது. அதே போன்று இனி வரும் காலங்களிலும் இந்த கட்சியின் பங்களிப்பு அவர்களுக்கு அவசியமே.

வன்னியிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடனும் புத்தி சாதூரியத்துடனும் செயற்பட்டால் கடந்த காலங்களை போன்று சவால்களை முறியடித்து , ஆட்சியில் தவிர்க்க முடியாத, முக்கிய ஒரு கட்சியாக பரிணமித்தது போல, இனி வரும் காலங்களிலும் அதனை விளங்க செய்ய முடியும். அதன் மூலம் நாம் சொல்வதை செய்ய கூடிய நாட்டுத்தலைமையை உருவாக்க முடியும். எல்லா இனத்தையும் மதத்தையும் சமமாக மதித்து போஷிக்கும் ஒரு ஜனாதிபதியையும் உருவாக்கலாம்.

எமது செயற்பாடுகள் சிறு பிள்ளைத்தனமாக இருக்க கூடாது. தூர இலக்குடன் செயற்பட வேண்டும். இனங்களுக்கிடையிலும் , மதங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை சிதைத்து எங்களை பிரித்து வேறாக்க நினைப்பவர்களுக்கு நமது ஒற்றுமையின் மூலம் சிறந்த பதில்களை வழங்குவோம் . இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

Related posts

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்

மொட்டுவை மோப்பமிடும் சிவப்பு தொப்பிகள் 

களனி பல்கலைக்கழகம் தமது 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது