(UTV|JAPAN) ஜப்பானில் ¼ கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் 5 மாதங்களில் 3 கிலோ உயர்ந்தது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கீயு பல்கலைக்கழக மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர், மருத்துவ பரிசோதனைக்காக வந்தார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் உள்ள கருக்குழந்தை போதிய வளர்ச்சியடையாமல் இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் குறைப்பிரசவமாக 6 மாதத்தில் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையின் எடை 268 கிராம் மட்டுமே இருந்தது. அதாவது இருஉள்ளங்கைகளுக்குள் அடங்கும் வகையில் பெரிய வெங்காயத்தின் அளவில் அந்த குழந்தை இருந்தது. இதன் மூலம் அந்த குழந்தை உலகிலேயே மிக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தை என பெயர் பெற்றது.
இதையடுத்து, மருத்துவர்கள் அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அதன் பயனாக 5 மாதங்களில் அந்த குழந்தையின் எடை 3 கிலோ 200 கிராமாக உயர்ந்தது. தற்போது பிற குழந்தைகளை போல நலமாக இருக்கும் அந்த குழந்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.