சூடான செய்திகள் 1

வஸீம் தாஜுதீன் வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர ஆகியோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இன்று(28) சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இன்றைய விசாரணையின் போது, குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்ற நாளன்று அலரி மாளிகையில் இருந்து சென்ற 04 வாகனங்கள் மற்றும் அவற்றின் பயணங்கள் சம்பந்தமாக விசாரணை செய்யப்படுவதாக பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பாளர்களாக கடமையாற்றிய இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் சிலரின் பயணங்கள் சம்பந்தமாகவும் விசாரணை செய்யப்படுவதாக கூறிய பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல், அவர்களின் பயணங்கள் சம்பந்தமாக உத்தியோகபூர்வ பதிவறிக்கையை கண்டுபிடிக்க முடியாதிருப்பதாக கூறினார்.

அதேநேரம் உயிரிழந்த வஸீம் தாஜுதீனின் தொலைபெசி மற்றும் கணினி ஊடாகவும் விசாரிக்கப்பட்டதாகவும், அவற்றின் ஊடாக முக்கியமான தரவுகளை கண்டறிய முடியவில்லை என்றும் பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இந்த விசாரணைகளுக்கு அமைவான சாட்சிகளை கண்டறிவதில் உள்ள முன்னேற்றம் மிகவும் மந்த கதியில் இருப்பதாக நீதவான் இசுறு நெத்திகுமார திறந்த நீதிமன்றில் இன்று(28) தெரிவித்துள்ளார். அதன்படி விசாரணை நடவடிக்கையை விரைவாக நிறைவு செய்யுமாறும், பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் முறைப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து வழக்கை ஜூன் 27ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் விசாரணைகள் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

தொற்றுக்குள்ளான மேலும் 15 நோயாளிகள் பூரண குணமடைந்தனர்

மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது