(UDHAYAM, JAKARTA) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இந்தோனேசிய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான மர்டேகா மாளிகையில் நேற்று இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இந்தோனேசிய ஜனாதிபதி நட்புரீதியில் இதன்போது வரவேற்றார்.
40 வருடங்களின் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவருக்கு இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்த உத்தியோகபூர்வ அழைப்பினை குறிப்பிடும் வகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
இதன் பின்னர் இருநாட்டு அரச தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதுடன் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகின.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த விஜயத்தின் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான புதிய செயற்திட்டங்களை ஆரம்பிப்பது தொடர்பாக அரச தலைவர்களுக்கிடையில் கலந்துரையாடப்பட்டதுடன் இரு நாடுகளினதும் விவசாய துறையின் அபிவிருத்திக்காக தொழில்நுட்ப அறிவை பரிமாறிக்கொள்வது தொடர்பான செயற்திட்டம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
பிராந்திய பாதுகாப்பினை பலப்படுத்தல் தொடர்பாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகவும் அரச தலைவர்கள் கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கும் இடையில் திறந்த வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்தல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன் இருநாட்டு வெளிவிவகார அமைச்சுக்களின் ஊடாக அதற்கான பின்னணியை கண்டறிவதெனவும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவதாக இதன்போது இந்தோனேசிய ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனநாயக நாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் அரச தலைவர்கள் கலந்துரையாடினர்.
இந்தோனேசியாவின் தனியார் மற்றும் அரச முதலீட்டாளர்களுக்கும் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க முடியும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அதற்குரிய வரிச்சலுகைகள் மற்றும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அரசு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளுமாறு இந்தோனேசிய ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தின வைபவங்களில் கலந்துகொள்வதற்காக அந்த நாட்டு அரச பிரதிநிதி ஒருவரை பங்குபற்ற செய்யுமாறும் தெரிவித்தார்.
இதன் பின்னர் இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் அரச தலைவர்களின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கடல்சார் மற்றும் மீன்பிடி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையும், பாரம்பரிய தொழிற்துறை சார்ந்த ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன.
இலங்கை சார்பில் மீன்பிடி மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் துலிப் வெதஆரச்சி இந்தோனேசியா சார்பில் அந்நாட்டின் கடல்சார் அலுவல்கள் மற்றும் மீன்படி அமைச்சரும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.
ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இரு அரச தலைவர்களும் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றிலும் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவினால் வழங்கப்பட்ட விசேட விருந்துபசாரத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.