சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் ‘கிராம சக்தி’ மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழு கூட்டம் இன்று(18)

(UTV|COLOMBO) வறுமையை ஒழிப்பதற்கான ‘கிராம சக்தி’ மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழு கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(18) கம்பஹா, ஹேனேகம பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.

2018 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தில் கிராம சக்தி சங்கங்களுக்கு வழங்கப்பட்ட நிதி 47 மில்லியன் ரூபாவாகும். கம்பஹா மாவட்டத்திற்கு 39 மில்லியன் ரூபாவும் களுத்துறை மாவட்டத்திற்கு 42 மில்லியன் ரூபாவும் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 2,343,000 மக்கள் தொகையைக் கொண்ட கொழும்பு மாவட்டத்தின் வறுமையின் அளவு 0.9% ஆகும். 2,373,000 மக்கள் தொகையைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தின் வறுமையின் அளவு 2.0% ஆவதுடன், 1,281,000 மக்கள் தொகையைக் கொண்ட களுத்துறை மாவட்டத்தின் வறுமையின் அளவு 2.9% ஆகும்.

அந்த ஏழை மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு கிராம சக்தி மக்கள் இயக்கத்தினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து தோற்றுவித்திருக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இன்று(18) இடம்பெறும் செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரவு தெரிவித்துள்ளது.

மாகாணத்தின் அரசியல் தரப்பு மற்றும் அரச அதிகாரிகள் ஆகிய இருதரப்பினரின் பங்களிப்பில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் மேல் மாகாண மக்கள் முகங்கொடுத்துவரும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு சாத்தியமான துரித தீர்வுகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேல் மாகாண கிராமசக்தி சங்கங்கள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கிடையே கிராமசக்தி சங்கங்களிலிருந்து புதிய உற்பத்திகளை கொள்வனவு செய்வது தொடர்பில் சில உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜனசவிய, சமுர்த்தி, திவிநெகும ஆகிய வேலைத்திட்டங்களை நுட்பமாக அவதானித்ததன் பின்னர் கிராமசக்தி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த வேலைத்திட்டங்கள் அனைத்தையும் விட முற்போக்கானதும் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டமாக கிராமசக்தி செயற்பட்டு வருகிறது.

இதுவரை காலமும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சமூக வலுவூட்டல் வேலைத்திட்டங்கள் மக்களுக்கு நிதி அல்லது மானியங்களையே வழங்கி அவர்களை ஊக்குவித்தன. ஆனால் கிராமசக்தி அவ்வாறான செயற்திட்டமல்ல. அரச துறை, தனியார் துறை மற்றும் மக்கள் ஆகிய முத்தரப்பையும் ஒன்று சேர்க்கும் மக்கள் இயக்கமாகும்.

உற்பத்திகளை மேம்படுத்துதல், கீழ் மட்ட வறுமையிலிருந்து விடுபடுதல் ஆகிய இரண்டு விடயங்களும் ஒரே கண்ணோட்டத்தில் கிராமசக்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவேற்றப்படுகின்றது. அதேபோன்று இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் முக்கியத்துவமளித்து உருவாக்கப்பட்ட முதலாவது தேசிய ரீதியான பொருளாதார நலன்புரி வேலைத்திட்டமும் கிராமசக்தி மக்கள் செயற்திட்டமேயாகும்.

மேல் மாகாண கிராமசக்தி கிராமிய நிகழ்ச்சிகள் இன்று கம்பஹா, தொம்பே, வல்அரம்ப உற்பத்தி கிராமத்தை மையமாக கொண்டு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

 

 

 

 

 

Related posts

கடற்பரப்புகளில் காற்றுடன் கூடிய நிலைமை மேலும் அதிகரிக்கும்

பாதுகாப்புப் பிரிவினருக்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருப்பதாக இராஜாங்க அமைச்சர்

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )