(UTV|COLOMBO) கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடர பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
52 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படமாட்டாது எனவும், அவர்களுக்கான தண்டனை தொடர்பில் விரைவில் தீர்மானிக்கவுள்ளதாகவும் அந்தக் குழு கூறியுள்ளது.
பாராளுமன்றில் ஏற்பட்ட மோதல் நிலை தொடர்பில் விசாரணை செய்த குழுவின் அறிக்கை கடந்த 22 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
அந்த அறிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர, ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, பத்ம உதயசாந்த ஆகியோருக்கு எதிராக பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பாராளுமன்றத்தினுள் மிளகாய் தூள் தூவியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பாலித்த தெவரப்பெரும ஆகியோருக்கு எதிராக பாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை கொண்டு வந்தமை தொடர்பில் வழக்கு தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சபாநாயகரின் மேசை மீது உள்ள ஒலிவாங்கியை உடைத்து சேதமாக்கியதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த அளுத்கமகே மற்றும் திலும் அமுனுகம ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.