காதலர் தினத்தையொட்டி, ஓசூரில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒரு கோடி ரோஜா மலர்களை ஏற்றுமதி செய்யும் பணியில் சாகுபடியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் பசுமை குடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது. தாஜ்மஹால், நோப்ளஸ், ப்ர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜாக்கள் உற்பத்தியாகிறது. இங்கு உற்பத்தியாகும் ரோஜாக்கள், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் போன்ற விழாக்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
காதலர் தினத்துக்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு கோடிக்கு மேல் மலர்கள் ஏற்றுமதி செய்வது வழக்கம். வரும் பெப்ரவரி .14ம் திகதி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்காக, 1ம் திகதி முதல் பூக்களை சீர்படுத்தும் பணியில் மலர் சாகுபடியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.