(UTV|COLOMBO) தமது பிரச்சினைகளுக்கு இன்று(05) உரிய தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுங்க அலுவலக அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடரும் இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அத்தியாவசியமற்ற பொருட்களை விடுவிக்கும் பணிகளை இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொள்கலன் போக்குவரத்து சங்கத்தினருடன், பதிவாளர்கள் சங்கத்தினரும் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை, சகல மொத்த வியாபார நிலையங்களையும் இன்று மூடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத் திணைக்கள பணிப்பாளராக இருந்த பி.எஸ்.எம். சார்ள்ஸ் பதவி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .