சூடான செய்திகள் 1

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்…

(UTV|COLOMBO) சுயாதீனமான தன்னாட்சி நாடாக பிரித்தானியாவிடம் இருந்து விடுதலைப்பெற்ற இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் இன்றாகும்.

இன்றைய சுதந்திர தின நிகழ்வானது இலங்கை வாழ் மக்களால் கொண்டாடப்படுகிறது.

இலங்கையானது, பல அந்நிய சக்திகளின் ஆக்கிரமிப்புக்களுக்கு உட்பட்ட ஒரு நாடாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.

போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆகியோரின் ஆட்சியை தொடர்ந்து இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டது.

1505ஆம் ஆண்டு இலங்கைக்கு போர்த்துகேயர் படையெடுத்தனர்.

அதனை தொடர்ந்து இலங்கை போர்த்துகேயர் வசமானது.

நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இலங்கையை போர்த்துகேயர் ஆட்சி செய்து வந்த நிலையில், அவர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் 1655ஆம் ஆண்டு இலங்கைக்கு ஒல்லாந்தர் படையெடுத்து வந்தனர்.

அதனை தொடர்து இலங்கையில், ஒல்லாந்தர் ஆட்சி நிறுவப்பட்டது.

அன்று முதல் இலங்கையை ஆட்சி செய்து வந்த ஒல்லாந்து படைகளுக்கு அச்சுறுத்தலாக, ஆங்கிலேயர் 1796ஆம் ஆண்டு இலங்கையில் அதிகாரத்தை உறுதிப்படுத்தினர்.

போர்த்துகேயர் மற்றும் ஒல்லாந்தர் இலங்கையில் ஆட்சி செய்திருந்தாலும், அவர்களால் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முடியாதிருந்தது.

எனினும் ஆங்கிலேயர் இலங்கையின் கரையோர பகுதிகளை மாத்திரமன்றி, கண்டி இராச்சியத்தையும் கைப்பற்றி ஒட்டு மொத்த இலங்கை முழுவதிலும் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டினர்.

ஆங்கிலேயர் இலங்கையில் பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி அரசியல் ரீதியாகவும் பல மாற்றங்களை கொண்டு வந்தனர்.

அரசியல் மாற்றங்களுடன், பிரித்தானியர்களுக்கு எதிரான போராட்டங்களும் நாட்டில் தலைதூக்கின.

1900ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன.

இந்த போராட்டங்களுக்கு டி.எஸ்.சேனாநாயக்க போன்ற சிங்கள தலைவர்களை போன்று, சேர் பொன்னம்பலம் போன்ற சிறுபான்மை தலைவர்களும் உறுதுணையாக நின்றனர்.

இறுதியில் 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி இலங்கை பிரித்தானியர்களின் ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திரமடைந்தது.

இந்தநிலையில், இன்றைய 71வது சுதந்திர தின, தேசிய நிகழ்வுகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கொழும்பு – காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.

இன்றைய நிகழ்வில் சிறப்பு அதிதியாக, மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் Ibrahim Mohamed Solih கலந்துக் கொள்ளவுள்ளார்.

இன்றைய தேசிய சுதந்திரதின நிகழ்வில் அணிவகுப்பு மரியாதைக்காக ஐயாயிரத்து 848 படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மூவாயிரத்து 872 பேரும், கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரத்து 44பேரும், விமானப்படையை பிரதிநிதித்துவப்படுத்தி 932 பேரும் அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்க உள்ளனர் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

இவற்றுக்கு மேலதிகமாக, காவல்துறையை பிரதிநிதித்துவப்படுத்தி, விசேட படைப்பிரிவு உட்பட 920 காவல்துறையினரும், தேசிய மாணவர் செயலணியை பிரதிநிதித்துவப்படுத்தி 302 பேரும் இம்முறை சுதந்திரதின அணிவகுப்பு மரியாதையில் கலந்துகொள்ள உள்ளனர்.

இதேவேளை, தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறும் போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், விசேட போக்குவரத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, இன்று காலை 5 மணி முதல் கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலிமுகத்திடல் நோக்கி பயணிக்கும் வீதி மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வீதியின் ஊடாக பயணிக்கத் திட்டமிட்டுள்ள வாகனங்கள், கொள்ளுப்பிட்டி சந்தியில் வலதுபக்கமாக திரும்பி, நகர மண்டபம் ஊடாக கோட்டையை நோக்கி பயணிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம், கொழும்பிலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் ஊடாக காலி முகத்திடலை நோக்கிச் செல்லும் லோட்டஸ் வீதியும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வீதியின் ஊடாக பயணிக்க திட்டமிட்டுள்ள வாகனங்கள், பஞ்சிகாவத்தை – மருதானை ஊடாக கொள்ளுப்பிட்டிக்கு பிரவேசித்து, காலிவீதியை சென்றடைய முடியும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 

Related posts

இலங்கை-சீஷெல்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

மோதல் சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை…

‘சுவசெரிய’ சேவை இன்று(21) முதல் சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பம்