(UTV|COLOMBO)-தேச விரோத சக்திகளை தோல்வியடைச் செய்ய எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுவான மக்கள் சக்தியாக மாற்றியமைத்து நாட்டை நேசிக்கும் அனைவரும் ஒன்றுதிரள வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்டத்திற்கான புதிய அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (31) பிற்பகல் இடம்பெற்றபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் நாடு பூராகவும் புதிய மாவட்ட அலுவலகங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புதிய அலுவலகம் இலக்கம் 65, ஆனந்த ராஜகருணா மாவத்தை கொழும்பு 10 என்ற முகவரியில் அமைந்துள்ளது.
புதிய கட்டிடத் தொகுதிக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் திலங்க சுமதிபால மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார்.
அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வை அடையாளப்படுத்தும் முகமாக நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்த ஜனாதிபதி அவர்கள், அங்கு வைக்கப்பட்டுள்ள அதிதிகள் கையேட்டிலும் கையொப்பமிட்டார்.
அதன்பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், எம்மால் செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளையோ தலைவர்களையோ தோல்வியடையச் செய்வது அல்ல. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் விளைவிக்கும் சக்திகளை சரியாக கண்டறிந்து அவற்றை தோல்வியடையச் செய்வதே காலத்தின் தேவையாகும் எனத் தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளிலும் நாட்டை நேசிக்கும் குழுவினரைப் போன்றே தன்னை பற்றி மாத்திரம் எண்ணி நாட்டுக்கு துரோகம் விளைவிக்கும் குழுவினரும் இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், மக்களுக்கான அரசியல் பயணத்தை நோக்கி முன்னேறும்போது அதற்கான சிறந்த தலைவர்களையும் செயற்பாட்டாளர்களையும் கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாக அமைந்துள்ளதுடன், நாட்டுக்கு புதிய அரசாங்கத்தை உருவாக்கும் வருடம் என்பதையும், அந்த பயணத்தின்போது தேசப்பற்றுடைய அரசியல் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தயார் செய்வதன் பொறுப்பு தொடர்பி்ல் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அவர்கள், அதற்கான கடமையை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து குடிமக்களிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மத தலைவர்களும் ஸ்ரீ லங்க சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, எஸ்.பி.திசாநாயக்க, பைசர் முஸ்தபா, டிலான் பெரேரா, சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே, வாசுதேச நாணயக்கார, சரத் ஏக்கநாயக்க மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் திலங்க சுமதிபால உள்ளிட்ட கட்சி ஒருங்கிணைப்பாளர்களும் செயற்பாட்டாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.