தென்கொரியாவில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் வளர்ப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதையே விரும்புகின்றனர். குழந்தைகளை வளர்ப்பதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், பலர் தங்கள் செல்லப்பிராணிகளையே குழந்தையாக நினைத்து வளர்க்கத் தொடங்கி உள்ளனர்.
தென் கொரியாவின் சியோல் நகரில், காங் சுங் லி என்பவர் மனைவியுடன் வசித்து வருகின்றார். இவர் தனது தாயை காண செல்லும்போதும், பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு செல்லும் போதும் செல்லப்பிராணியான சன்சூ எனும் பொமேரியன் வகை நாயுடன் பயணம் செய்வது வழக்கம். மேலும் சந்திர புத்தாண்டு விடுமுறை நாளில் சின்சூவிற்கு 50 டாலர் மதிப்புடைய ஆடை அணிவிக்க போவதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில், ‘‘குழந்தை வளர்ப்பு பொருளாதார ரீதியாக பெரும் சுமையானது மற்றும் மன அழுத்தம் நிறைந்தது என்பதை புரிந்துக் கொண்டோம். இதனால் செல்லப்பிராணிகளிடம் அன்பை வெளிப்படுத்தினோம். சன்சூவை குழந்தையாகவே பாவித்து வளர்த்து வருகின்றோம். சன்சூவிற்கு மாதம் 90 டாலர் செலவிடுவது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களைப்போன்று பல தம்பதிகள் செல்லப் பிராணிகளை வளர்க்க விரும்புகின்றனர்” என்றார்.
39 வயதான இவர் செல்லப் பிராணிகளுக்கான சேவை மையம் ஒன்றையும் நிறுவி வருவது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவில் செல்லப்பிராணிகள் தொழில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆண்டு வளர்ச்சியடைந்துள்ளது. அதேசமயம் தென் கொரியாவின் பிறப்பு வீதம் 1.05 எனும் அளவுக்கு குறைந்து, உலகிலேயே மிகக் குறைவான பிறப்பு வீதமாக உள்ளது. கல்விக்கான கட்டண உயர்வு , வீட்டு வாடகை உயர்வு மற்றும் அதிக வேலை நாட்கள் என பல காரணங்களால் பிறப்பு வீதம் குறைந்ததாக கூறப்படுகிறது.