தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயத்தை குறிவைத்து தாக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்சால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஆட்களை கடத்தி படுகொலை செய்வது மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், சூலு மாகாணத்தின் தலைநகர் ஜோலோவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சற்றும் எதிர்பாராத வகையில் தேவாலயத்துக்குள் குண்டு வெடித்தது.
குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த தேவாலயத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
தேவாலய வளாகத்துக்குள் மற்றொரு குண்டு வெடித்து சிதறியதில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படைவீரர்கள் சிக்கினர்.
அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டுவெடிப்புகளால் அங்கு பதற்றமான சூழல் உருவானதையடுத்து அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டன.
இந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி 7 பாதுகாப்புபடை வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 77 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.