சூடான செய்திகள் 1

தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு நாம் பணிபுரிபவர்கள் அல்லர் ! வவுனியா வடக்கு சிங்கள பிரதேசங்களின் வரவேற்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

(UTV|COLOMBO)-தேர்தல் காலங்களை மட்டும் இலக்காக கொண்டு தமது செயற்பாடுகள் ஒருபோதும் அமைந்ததில்லை எனவும் யுத்த காலத்திலே உயிரைக்கூட துச்சமென நினைத்து வன்னி மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் பிரச்சினைகளையும் அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி வந்ததாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கில் வாழும் சிங்கள சமூகத்தினர் இன்று காலை(24) அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு வழங்கிய வரவேற்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வடக்கு கிழக்கு பிரதான சங்க நாயக்க வவுனியா ஸ்ரீ போதி தக்ஷிணா ராமய விகாராதிபதி வண.சியம்பல கஸ்வாவே விமலசார தேரர் மற்றும் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜெயதிலக , ஐ .தே. க .முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கருணதாஸ மற்றும் வன்னி மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ,அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் மேலும் கூறியதாவது ,

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தக்கெடுபிடிகளில் இருந்து விடுபட்டு மீண்டும் சமாதானக்காற்றை சுவாசித்து வருகின்றோம் கடந்த காலங்களில் இனங்களுக்கிடையே மோதல் ,மதங்களுக்கிடையே பிரச்சினைகள், சமூகங்களுக்கு இடையே பிரிவினைகள் என மேலோங்கி இருந்ததனால் பிளவுகளும் பிரச்சினைகளும் அதிகரித்திருந்தன.

வவுனியாவில் வாழ்ந்து வந்த சிங்கள, முஸ்லீம், தமிழ் மக்களுக்கிடையிலான பிளவுகள் ஏற்பட்டதனால் மாவட்டத்தின் அமைதி நிலை பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. யுத்த காலத்திலே இந்த மக்கள் பட்ட கஷ்டங்களை நாம் விபரிக்க முடியாது . எனினும் எம்மைப் பொறுத்தவரையில் நாம் எந்த ஓர் இனத்துக்கும் பேதம் பாராது பணியாற்றி இருக்கின்றோம் . உங்களுக்கு துன்பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் இரவு பகல் பாராது ஒடோடி வந்திருக்கின்றேன். முடியுமான அத்தனை உதவிகளையும் மேற்கொண்டிருக்கின்றேன். யுத்த காலத்தில் பீதியில் வாழ்ந்த சிங்கள மக்களுக்கு தைரியமூட்டி இருக்கின்றேன்.

வவுனியாவில் பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் வாழ்ந்த பௌத்த மதகுருமார்களுக்கு இது நன்கு தெரியும் .அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள் ,கோரிக்கைகளுக்கு எல்லாம் செவிசாய்த்து மனச்சாட்சிப்படி நாம் உதவியிருக்கின்றோம். மனிதாபிமான அடிப்படையிலேயே எமது உதவிகள் வழங்கப்பட்டதேயொழிய தேர்தல்களையோ வாக்குகளையோ மையமாக வைத்து மேற்கொள்ளப்பட்டதல்ல .அவ்வாறு நாம் எந்த காலத்திலும் செயற்படமாட்டோம் . மக்களின் துன்பங்களிலே நாம் ஒருபோதும் அரசியல் நடத்த விழைந்ததில்லை.

எனினும் எமது சேவையை அங்கீகரித்ததனாலேயே எங்களது அரசியல் செயற்பாடுகளுக்கும் சிங்கள சகோதரர்கள் ஆதரவளிக்க தொடங்கினர்.அதுமாத்திரம் இன்றி எமது நேர்மையான பணிகளை பௌத்த மதகுருமாரும் அங்கீகரித்தனர் . கடந்த காலங்களில் நாம் சில தீர்க்கமான அரசியல் முடிவுகளை மேற்கொள்ள முன்னர், எம்முடன் நெருக்கம் கொண்டிருக்கும் சமயப் பெரியார்களுடன் ஆலோசனை பெற்ற பின்னரே இறுதி முடிவை மேற்கொண்டிருக்கின்றோம். மூன்று ஜனாதிபதி தேர்தல்களில் நாம் ஆதரித்த வேட்பாளர்ளே வெற்றிபெற்றனர் . உங்களின் ஆதரவும் இறைவனின் உதவியும் எமக்கிருந்தது .

அதே போன்று அண்மையில் அரசியலில் ஏற்பட்ட பிரளயத்தின் போது ,அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் நாம் எடுத்த சரியானதும் நேரானதும் நேர்மையானதுமான , முடிவினாலும் நீதியும் எமக்கு துணைசெய்ததாலும், மிகச்சரியான தடயத்தில் பயணிக்க முடிந்தது. அமைச்சுப்பதவியை பறித்தெடுத்தனர். குறிப்பிட்ட காலத்தில் எம்மை ஓரங்கட்டவும் வீழ்த்தவும் சிலர் சதி செய்தனர். எனினும் அவைகளெல்லாம் தோல்விபெற்றதனால் எமக்கு மீண்டும் அமைச்சுப்பதவி கிடைத்தது.

அரசியலில் நாங்கள் எதிர்நோக்கிய சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் எம்முடன் நின்று ஒத்துழைப்பு வழங்கிய நல்லுள்ளங்களையும் பக்கபலமாக நின்று உதவி வருகின்ற வடக்கு பௌத்த மத குருமார்களையும் வன்னியில் வாழும் சிங்கள சகோதரர்களையும் நான் நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன். அதே போன்று வவுனியா சிங்கள கம்மான ,வெலி ஓய மற்றும் ஏனைய இடங்களிலும் வாழும் சிங்கள சகோதரர்களின் நல்வாழ்வுக்கும் , அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றவும் நாம் கடந்த காலங்களில் காத்திரமான திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றோம். 2017,2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல ஆயிரம் மில்லியன் ரூபா சிங்கள பிரதேசங்களில் செலவிடப்பட்டதை நான் நினைவு படுத்துவதோடு வடக்கில் உள்ள பௌத்த விகாரைகளின் புனரமைப்புக்காக விகாரதிபதிகள் வேண்டுகோள் விடுத்த போதெல்லாம் உதவியுள்ளோம் . இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

Related posts

எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை

கொழும்பு பாதுகாப்பு மாநாடு இரண்டாம் நாள் இன்று

சாய்ந்தமருது குர்ஆன் மதரஸாவிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு : நிர்வாகி கைது- பதற்ற நிலை