(UTV|INDIA)-டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி சினிமா டிக்கெட் கட்டணம், டி.வி., கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் உள்பட 23 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது.
மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருட்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சரக்கு வாகன 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.
ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
32 அங்குலம் வரை கொண்ட டி.வி. பெட்டி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்த வரி சீரமைப்பு குறித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவை நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.
இதையடுத்து இன்று முதல் மேற்கண்ட 23 வகையான பொருட்கள் விலை குறைப்பு அமலுக்கு வந்தது.