(UTV|INDIA)-இந்தியா, உத்தரப்பிரதேசம், பரோலி பொலிஸ் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டிருந்த ஆயிரம் லீட்டர் மதுவையும் எலி குடித்துவிட்டதாக பொலிஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையால் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கு முன் பீஹார் மாநிலத்திலும் மதுவை எலி குடித்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர், கஞ்சாவை தின்றுவிட்டதாக ஜார்கண்ட் பொலிஸாரும், ரூபாய் தாள்களை சேதப்படுத்தியதாக அசாமிலும் எலி மீது பழிபோட்டு தப்பித்திருந்தது கவனிக்கத்தக்கது.
பரேலி கண்டோன்மென்ட் பொலிஸ் நிலையத்தின் சார்பில் சட்டவிரோத மதுபோத்தல்கள், கள்ளச்சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த மதுபோத்தல்களையும், கலன்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க பொலிஸாருக்கு உயர் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டனர்.
மதுபோத்தல்களை வைத்திருந்த களஞ்சியசாலையை திறந்த பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த போத்தல்கள் அனைத்தும் வெறுமையாகவும், கலன்களில் மது இல்லாமலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இங்கு நடந்த சம்பவத்தை உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
ஆனால், இதை ஏற்க மறுத்த பரோலி மாவட்ட பொலிஸ் அதிகாரி இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.