(UTV|INDIA)-சினிமாவில் டிஜிட்டல் கேமரா வருகையால் ஆண்டுதோறும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வருடத்திற்கு 200-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகி வந்தன.
ஆனால் 2018-ல் இந்த எண்ணிக்கை 171 ஆக குறைந்துள்ளது. டிஜிட்டல் ஒளிபரப்பு கட்டணத்தை குறைப்பதற்காக தமிழ் சினிமா சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய வேலை நிறுத்தத்தால் ஏப்ரல், மே மாதங்களில் 48 நாட்கள் எந்த படமும் வெளியாகவில்லை.இதுவே பட எண்ணிக்கை குறைந்துபோக காரணம் என்கிறார்கள்.
இந்த வேலைநிறுத்தத்துக்கு பின்னர் எடுத்து முடிக்கப்பட்ட படங்களின் ரிலீசில் சிக்கல் உண்டானது. இந்த சிக்கல் இன்று வரை நீடிக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்த பூமராங், சர்வம் தாள மயம் உள்ளிட்ட 2 படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்காததால் பின்வாங்கிவிட்டன.
தமிழ்நாட்டில் சுமார் 1000 தியேட்டர்களே உள்ளன. கடந்த வாரம் வெளியான 7 படங்களும் கடந்த மாதம் வெளியான 2.0 படமும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதே தியேட்டர் கிடைக்காததன் காரணம். இந்த நிலை பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என்ற 2 படங்கள் வெளியாகும் வரை நீடிக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.