சூடான செய்திகள் 1

போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

(UTV|COLOMBO)-சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் பற்றிய தேடுதல் நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அவர்களினால் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னரான கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் பற்றிய தேடுதல் நடவடிக்கைகள் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் அடைந்துள்ளது.

2018 ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான பத்து மாத காலத்தில் 184.6 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆயினும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் சட்டவிரோத போதைப்பொருள் தேடுதல் தொடர்பான விசேட செயற்திட்டத்திற்கமைய நவம்பர் முதலாம் திகதி முதல் இதுவரையான சுமார் இரண்டு மாத காலத்திற்குள் மாத்திரம் 280 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் பொலிஸ் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த இரண்டு மாத காலத்திற்குள் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் 15530 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதையின் பிடியிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலில் விரிவான வேலைத்திட்டங்கள் பலவும் தற்போது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அச்செயற்திட்டங்கள் ஜனாதிபதியினால் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு சிறிதும் இடமளிக்காது அதனை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஜனாதிபதி எதிர்பார்ப்பதுடன், இதன்போது சட்டத்தினை வினைத்திறனாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்குவதற்கு தேவையான சட்ட வரைவும் தற்போது ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய துரிதமாக இடம்பெற்று வருகின்றது.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

 

 

 

Related posts

லோட்டஸ் சுற்று வட்ட வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

புகையிலைப் பொருள் விற்பனை 15 சதவீதத்தால் வீழ்ச்சி

ராஜிதவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவு