(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனசை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக கூறி நாட்டில் பரப்பரப்பை ஏற்படுத்திய நாமல் குமார என்பவருக்கு அதுவே எதிர்மறையான நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் நாமல் குமாரவின் குரல் பதிவுகளும் பரீட்சிக்கப்பட்டதாகவும் அதில் நாமல் குமார, நாட்டின் பாதுகாப்பு பிரதானி ஒருவரை கொலை செய்யும் யோசனை முன்வைக்கும் குரல் பதிவும் விசாரணைக்குழுவிடம் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமல் குமாரவின் செல்போனை ஹொங்கொங் எடுத்துச் சென்ற அதிகாரிகள் கடந்த 14 ஆம் திகதி நாடு திரும்பினர்.
செல்போனில் அழிக்கப்பட்டிருந்த பல பதிவுகள் விசேட கணினி நிபுணர்களால் திரும்பபெறப்பட்டுள்ளன. குரல் பதிவுகள் அடங்கிய பென் ட்ரைவ் தொடர்பான அறிக்கையும் கிடைத்துள்ளது.
இந்த அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்களம் கடந்த 19 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கையளித்துள்ளது.
பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி இந்த தீர்மானம் குறித்து அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
நாமல் குமாரவின் குரல் பதிவுகள் மட்டுமல்லாது அடிப்படை விசாரணை அறிக்கைகளும் ஸ்கொட்லேன்ட் யார்ட் பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதுடன், ஸ்கொட்லேன்ட் யார்ட் பொலிஸார் இலங்கைக்கு வந்து விசாரணைகளை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.