(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கும் வட மாகாண அரசாங்க அதிபர்கள் மற்றும் வடக்கிலுள்ள அரச ஊழியர்களுக்கு இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
வட மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வௌ்ள நிலைமை தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 54,819 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 11,299 பேர் இடம்பெயர்ந்து 38 முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், வௌ்ளம் காரணமாக 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 218 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை, தற்போது வௌ்ளம் வடிந்தோடுவதாகவும் இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வட மாகாணத்தில் தற்போது மழை குறைவடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில், இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதையடுத்து, வான் கதவுகள் மூடப்பட்டுள்ளன.