(UTV|COLOMBO)-புதிய அமைச்சரவை சத்திய பிரதமாணம் தொடர்பில் அரசாங்கத் தரப்பின் கலந்துரையாடல்கள் இன்றும் இடம்பெறும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, பெரும்பாலும் நாளைய தினம் இறுதி முடிவு ஒன்று எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகியமை மற்றும், ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூடவுள்ளனர்.
இதன்போது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை முற்பகல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
அத்துடன், நாடாளுமன்ற எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் நோக்கில், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற கட்டித் தொகுதியில் நாளை பிற்பகல் ஒரு மணியளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு ஒன்று மேற்கொள்ளப்படும் என, நாடாளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர ஃபெனான்டோ தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் பணிப்புரைக்கு அமையை இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.