(UTV|INDIA)-தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு இப்போது வாய்ப்புகள் குறைந்துள்ளன. உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். திருமணத்துக்கு தயாராவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-
“ஒவ்வொரு படத்துக்கும் கடினமாக உழைக்கிறேன். பலனை காலத்திடம் விட்டுவிட்டேன், கதை பிடித்தால் இளம் நடிகர்கள் புதிய இயக்குனர்கள் படங்களிலும் நடிப்பேன். யாருடன் நடிக்கிறோம் என்பதை விட என்ன மாதிரி கதைகளில் நடிக்கிறோம் என்பது தான் முக்கியம். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற குயீன் படத்தின் தமிழ் பதிப்பில் இப்போது நடிக்கிறேன். தமிழுக்கு ஏற்ப திரைக்கதையில் மாற்றம் செய்துள்ளனர்.
என் திருமணம் பற்றி பலரும் கேட்கிறார்கள். ஒரு சமயத்தில் எனது மனம் திருமணத்தை நோக்கி போனது. இப்போது அந்த எண்ணம் இல்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும். என்னை உண்மையாக நேசிக்க வேண்டும். கவுரவிக்க வேண்டும். கண்மூடித்தனமாக என்னை நம்ப வேண்டும்.
அவரது முதல் முக்கியத்துவம் நானாக இருக்க வேண்டும். வீட்டு வேலையில் எனக்கு உதவி செய்ய வேண்டும். என்னை எப்போதும் சிரிக்க வைக்க வேண்டும். கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறேன். கமலுடன் நடிப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.