(UTV|COLOMBO)-தனியார் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருந்து கொண்டு அரச நிறுவனங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டதால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி யாதுரிமை எழுத்தானை உத்தர பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிக்கான பெண்கள் அமைப்பின் துணை தலைவர் ஷேமிலா கோனவலவினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற பொதுச் செயலாளர் உட்பட நால்வரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரச நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருக்க அவருக்கு அனுமதியில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
பிரதிவாதியான ரணில் விக்ரமசிங்க, லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பங்குதாரர் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் கீழ் உள்ள தனியார் நிறுவனத்தின் ஊடாக இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியின் காசோலைகள் அச்சிடப்படுவதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எனவே லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பங்குதாரராக கடமையாற்றி இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் ஒப்பந்த அடிப்படையில் வியாபாரத்தில் ஈடுபட்டதால் ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.