சூடான செய்திகள் 1

“அரசியல்வாதிகளின் அளுத்கடைத் தியானம்”

(UTV|COLOMBO)-சட்டத்துறையின் ஆட்சியில் நாட்டு நிலைமைகள் நிலைகுலைந்து, பலரது மனநிலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. எத்தனையோ பேரின் தூக்கத்தை இரண்டுமாதம் இல்லாமலாக்கிய ஆட்சி. இன்னும் பல பேரை ஊடகத்துறையில் ஊறித்திளைக்க வைத்த ஆட்சி. நீதிமன்றப் பக்கமே செல்லாத சிலரை நாளாந்தம் புதுக்கடைக்கு படையெடுக்க வைத்த ஆட்சி, இது மட்டுமா! பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் பொறுமையைப் பரீட்சித்த ஆட்சி. இது போதாதா? கிராமம், நகரம், தொட்டு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சகலரையும் படபடக்க வைத்த இந்த சட்ட ஆட்சியின் காட்சிகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு நகரும், தீர்ப்பு எப்போது வரும் என்பதை எவருக்கும் தீர்மானிக்க முடியாதிருக்கிறதே. இதுதான் சட்ட ஆட்சியின் இலட்சியம், இது தான் சட்ட ஆட்சிக்கு இலட்சணம். எட்டி நின்று எவராலும் கட்டியம் கூற முடியாதுள்ளதும் இந்த சட்ட ஆட்சிக்கான சாட்சியமே.

இரண்டு மாதமாக நாட்டில் ஏற்பட்ட இந்த நெருக்கடி இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிதாக புகுத்தப்பட்டுள்ள விசித்திர அத்தியாயம். ஏன் இவ்வாறான அத்தியாயம் இதுவரை எமது வரலாற்றில் இணையாதிருந்தது?

அரசியலமைப்பு முறையாகப் பின்பற்றப்பட்டதால் சட்டம் மதிக்கப்பட்டது, சட்டம் முறையாக கௌரவிக்கப்பட்டதால் நீதித்துறையும், அரச நிர்வாகத்தில் செல்வாக்குச் செலுத்தாதிருந்தது.19ஆவது திருத்தம் வந்த பின்னரே நாட்டில் இந்த பதற்றம், பதகளிப்பு. பெண்ணை ஆணாகவும், ஆணைப் பெண்ணாகவும் மட்டுமே மாற்ற முடியாது என்று மார் தட்டிய நிறைவேற்று அதிகார முதலாவது ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்தன இன்றிருந்தால்,19 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்த 223 எம்பிக்களையும் ஏளனச் சிரிப்புடன் எள்ளி நகைத்திருப்பார். இவருக்கு சத்தியப் பிரமாணம் செய்து வைத்த பிரதம நீதியரசர் நெவில் சமரகோன் உயிருடன் இருந்தால் 19 இன் பின்னணிக்குள் புகுந்த பரமரகசியங்களுக்கு விளக்கம் வழங்கியிருப்பார்.

1978 பெப்ரவரி 04 இல் காலிமுகத்திடலில் திரண்டிருந்த சனத்திரளுக்கு முன்னால் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ஜே ஆர் உரையாற்றியமை கடல் அலைகளின் அதிர்வுகள் போல் இன்னும் பலரின் காதுகளுக்குள் இரைச்சலிடுகின்றன.

“ராசாவாக வாழத் தெரியாதவனுக்கு ராஜ்யம் தேவைப்பட்டால், தோட்டக்காரனும் தோது (சந்தர்ப்பம்) பார்ப்பானாம்” என்பார்கள். எதற்காக 19 ஐ கொண்டு வந்து நிறைவேற்று அதிகாரத்துக்கு கடிவாளம் இட்டார்கள்? இதற்கான தேவை ஏன் ஏற்பட்டது? கடிவாளம் இடப்பட்டிருந்தால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்குமா? இவ்வளவும் தெரியாமலா பாராளுமன்றம் கலைக்கப்பட்டது? எழுபது வருட அரசியல் பின்னணியுடைய முன்னாள் ஜனாதிபதி எதுவும் தெரியாமலா பிரதமர் பதவியை ஏற்றது? இவ்வாறான சிந்தனைகள் சில சந்தேகங்களையும் ஏற்படுத்தாமலில்லை.19 இன் கடிவாளத்தால் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சரியாக இறுக்கப்படவில்லையோ? இல்லை, ஒரு காலத்தில் ஜனாதிபதியானால் எளிதாக நீக்கிக்கொள்ளும் இலகுவான இரகசியத்தை ஐ.தே.க தலைவர் 19க்குள்ளே புதைத்து வைத்தாரோ? இந்தப் புதையலைப் பிரித்துப் பார்த்த பின்னர்தான் தற்போதைய ஜனாதிபதியும், முன்னாள் ஜனாதிபதியும் ஐ.தே.கவின் அரச அதிகாரத்தைப் பறிப்பதற்கு துணிந்திருப்பார்கள் என்பதுதான் சட்டத்தின் ஆட்சிக்குள் நின்று ஆராய்வோரின் ஆதங்கம். இல்லை. 19 இல் நான்கரை வருடங்களுக்குள் பாராளுமன்றத்தை கலைக்க முடியாதென்பது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை கூடிய கூட்டத்தில் நாளை வெள்ளிக்கிழமை பாடசாலை இல்லை என்று அறிவித்தால் திங்கட்கிழமைதான் பாடசாலை. மாறாக சனிக்கிழமை பாடசாலையாக இருந்தால் அந்தத்தினத்தின் பெயரை அதிபர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.அதே போன்றதே 19. இதில் தெளிவாகச் சொல்லப்பட்டதை வேறு பிடி வைத்து தகர்க்க முடியாது என்கின்றனர் சட்டத்தின் சந்து, பொந்து தெரிந்த சில விற்பனர்கள்.

தமது தேவைக் கேற்ப சட்டத்தை வளைப்பதா? அல்லது சட்டத்தின் தத்துவத்திற்கு நாம் வளைந்து செல்வதா? இந்த நிலைப்பாட்டில் நாட்டில் எத்தனை பேருள்ளனர். இது தான் இன்றைய கேள்வி. மக்களை, மக்கள், மக்களால் ஆளுவதே சட்ட ஆட்சி.

-சுஐப் எம்.காசிம்-

 

 

 

 

Related posts

மைத்திரியுடனான பேச்சுவார்த்தை வெற்றி

இலங்கையில் சமூகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் கவலையளிக்கிறது

கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!