சூடான செய்திகள் 1

அரசியல் அமைதியின்மை எதிர்வரும் வாரம் முழுமையாக நிறைவுக்கு கொண்டு வரப்படும்

(UTV|COLOMBO)-நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வரப்படுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

அது நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தாய் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நெருக்கடி நிலையை தோற்றுவித்தது தான் அல்ல என்றும், நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே ஆவார் என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி , இந்த தூரநோக்கற்ற நிகழ்ச்சித் திட்டங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்து நாட்டை கட்டியெழுப்பும் புண்ணிய பணிக்கு பங்குகொள்ளுமாறு தான் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தலைவர்களிடமும் சமாதானக் கரங்களை நீட்டுவதாகக் குறிப்பிட்டார்.

நேற்று (04) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“தீர்மானம் நாட்டுக்காக” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும் எண்ணிக்கையான செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

ரணில் விக்ரமசிங்கவின் தாராண்மைவாத அரசியல் கொள்கை நாட்டை அழிவுக்குள்ளாக்கியது மட்டுமன்றி நல்லாட்சி எண்ணக்கருவையும் அப்பட்டமாக துவம்சம் செய்தது என்றும் அக்கொள்கையின் காரணமாக பண்பட்ட அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமன்றி தமக்கும் பல தீய விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அந்த செயற்பாடுகளுக்கு மத்தியில் தம்மால் எடுக்கக்கூடிய ஒரேயொரு முடிவாக ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதே என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் நாட்டு மக்கள் மீதே நம்பிக்கை வைத்துள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், நாட்டை அழிவுக்குள்ளாக்கும் தீவிர தாராண்மைவாத அரசியல் செயற்திட்டத்தை தோல்வியுறச் செய்யக்கூடிய தேசாபிமானமும் மனித நேயமுமிக்க ஒரேயொரு அரசியல் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியாகும் என்றும், அதற்காக கட்சியை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்தையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களும் கட்சி செயற்பாட்டாளர்கள் பெருமளவில் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய உரை – சுகததாச உள்ளக விளையாட்டரங்கு

மும்மணிகளின் ஆசிகள்.

பௌத்த மதத் தலைவர்களே

ஏனைய மத தலைவர்களே

டி.மு.ஜயரத்ன, சரத் அமுனுகம பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாய, ஏனைய கட்சி உறுப்பினர்களே,
வரலாற்று முக்கியத்துமமிக்க இந்த மாநாட்டை சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்கும் வகையில் நாட்டின் நாலா புறங்களிலிருந்தும் இங்கு வருகைத்தந்திருக்கும் பெற்றோர்களே, நண்பர்களே, பிள்ளைகளே அனைவருக்கும் வணக்கம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்ற வகையில் எமக்கு சவால்கள் ஏற்பட்ட போதெல்லாம் மக்கள் பலத்தைக் கொண்டே நாம் முகங்கொடுத்து வந்திருக்கின்றோம். அம் மக்கள் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த விசேட மாநாட்டை ஒரு முக்கிய விடயமாக நான் கருதுகின்றேன். நம் நாட்டு மக்களுக்கு இந்த மாநாட்டின் மூலமாக ஒரு செய்தியைப் பெற்றுக்கொடுக்;க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும். அச் செய்தி என்ன? அச் செய்தியின் தன்மையும் பின்னணியும் என்ன? ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றை என்னைப் போன்றே நீங்களும் அறிவீர்கள். நாடும் அதை அறியும். இந்த சிரேஷ;ட வரலாறு தேசப்பற்று, இனப்பற்று, தேசம் மீதான பாசம், தேசியத்துவம் உள்ளிட்ட எமது உரிமைகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், கலாசாரம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் அரசியல் சித்தாந்தம் மற்றும் அரசியல் நோக்கு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பறங்கியர் ஆகிய அனைத்து இனங்களுக்கும் பொதுவான ஒரு அரசியல் மேடையையே எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க உருவாக்கினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதன் அரசியல் தரத்தை அடிப்படையாகக் கொண்டே பலம்பெற்று போஷிக்கப்பட்டு இந்த நாட்டில் ஒரு பலம்மிக்க அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஒரு வெற்று அரசியல் கட்சி அல்ல. அதேபோல் அது அவசரத்தில் பிரசவிக்கப்பட்ட ஒரு கட்சியும் அல்ல. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றதன் பின் சகலவித தேசியத்துவத்திற்கு எதிராகவும் எழுந்த அரசியல் தடைகளை மாற்றி புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்காகவே எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களினால் உருவாக்கப்பட்டது. அதன்போது சமகால அரசியல் தலைவர்கள், நண்பர்கள், சகாக்கள், போராளிகள் ஆகிய அனைவரும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். அவ்வாறு உருவாக்கபட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஒரு சிலரால் போஷிக்கப்பட்ட ஒரு கட்சியல்ல. எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களின் குருதியினாலும் சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதனால் சிந்திய கண்ணீரினாலும் சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையாரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் சிந்திய இரத்தத்தினாலுமே ஆகும். சி.வி.குணரத்ன, லக்ஷ்மன் கதிர்காமர், ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, த.மு.தசநாயக்க உள்ளிட்ட இந்நாட்டின் உழைக்கும் வர்க்கத்தினரதும் பாட்டாளி மக்களினதும் கண்ணீராலும் இரத்தத்தாலும் பெருமூச்சாலுமே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போஷிக்கப்பட்டு வலுப்பெற்றது.

அத்தகைய பிரமாண்ட அரசியல் கட்சிக்கு அன்றும் இன்றும் இருந்து வருகின்ற அரசியல் கோட்பாட்டின் பலமும் பாரிய ஒளியும் பரந்த வர்ணமுமே இந்நாட்டின் பொதுமக்களின் உள்ளங்களை கவரக் காரணமாக அமைந்தது. அதனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது எப்போதும் இந்த நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. சிறு மனிதர்களின் கட்சியாகவும் அவர்களுக்காகவும் தோள் கொடுத்தது. தொழிலாளர்களுக்கும் தொழிற் சங்கங்களுக்கும் தலைமையைக் கொடுத்தது. இங்கிருக்கின்ற தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட பாட்டாளி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரலாறானது இரத்தத்தாலும் கண்ணீராலும் உயிர்த்தியாகங்களினாலும் வியர்வையினாலும் கட்டியெழுப்பப்படுகின்றபோது அப்பாதையில் பாட்டாளி மக்கள் பாரிய சக்தியாக அமைந்தார்கள்.

அன்று அவ்வாறு இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இடைவிடாது வந்த அதன் பயணத்தில் இன்று ரணில் விக்ரமசிங்கவின் மிக மோசமான புதிய தாராளவாத, வலதுசாரி குப்பை அரசியல் பிரவாகத்தை தோற்கடிக்கத்தக்க வகையில் பலம்பெற்று தொடர்ந்தும் வீருநடை போட வேண்டும் என்பதை இங்கு நான் உங்களிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இன்று ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை என்ன? உங்களுக்காக இங்கு ஒரு விசேட சம்மேளனத்தை நடத்துவதற்கான காரணம் என்ன? இன்று இந்த நாட்டில் நிலவுவது அரசியல் அமைதியின்மையா? அரசியல் நெருக்கடியா? அரசியல் மோதலா? நாட்டினுள் அவ்வாறான எந்தவித அரசியல் மோதலும் இல்லை. ஆயினும் நாட்டினுள் ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. அதனால் அமைதியின்மை ஏற்பட்டிருக்கின்றது. இந்த மோதல், நெருக்கடி, அமைதியின்மை ஆகியவற்றை எவ்வாறு தெளிவுபடுத்துவது? மோதல் தவிர்ப்பு, மோதல் முகாமைத்துவம் ஆகியன விஞ்ஞான ரீதியிலான ஒரு விடயமாகும். அந்த வகையில் அரசியல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதும் விஞ்ஞான ரீதியிலான ஒரு விடயமாகும். அத்தோடு அது கல்வி சார்ந்த, உயரிய ஒரு விடயமாகவும் அமைகின்றது. இவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த அரசியல் அமைதியின்மை உருவாகியிருக்கின்றது. இந்த அரசியல் அமைதியின்மையும் நெருக்கடியும் எங்கிருந்து வெளிவருகின்றது? அது எவ்வாறு உருவானது? அதன் பின்னணி என்ன? 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி என்னை ஆட்சியில் அமர்த்திய 62 இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இன்றும் நான் எனது சிரம் தாழ்த்தி மதிக்கின்றேன். நான் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி எடுத்த முடிவு அன்றைய தினத்தை விட இன்று மிகவும் சரியான முடிவாகும் என்பதை இங்கு கூற விரும்புகின்றேன். அம் முடிவானது ஒரு யுகத்தின் தேவையாகவே அமைந்தது. அதேபோன்று கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதியன்று நான் மேற்கொண்ட அரசியல் தீர்மானமும் மிகவும் சரியான அரசியல் தீர்மானமாகும் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட அரசியல் தீர்மானமும் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி மேற்கொண்ட அரசியல் தீர்மானமும் எதனால் சரியான தீர்மானங்களாக அமைகின்றன? அது அரசியல் கோட்பாட்டிற்கு அமைய நாட்டுக்காக மேற்கொண்ட தீர்மானங்கள் என்பதனாலேயே சரியானதாக அமைகின்றன. ஊழல், மோசடி, களவு, காட்டிக்கொடுப்புக்கு எதிராக இந்த நாட்டினுள் ஒரு கண்ணியமாக சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக மனிதநேயமிக்க அரசியல் சித்தாந்தமிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையினால் எழுப்பப்படும் பாரிய ஒளியினாலும் அதன் பிரவாகத்தினாலும் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகவும் ஆன்மீக ரீதியில் ஒழுக்கமும் பண்புமிக்க சமூகத்தைக் கட்டியெழுப்பவே இந்த இரு அரசியல் தீர்மானங்களையும் மேற்கொண்டேன். அது மிக விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயமாகும். குறிப்பாக அந்த இரு தீர்மானங்களும் ஒரே அரசியல் பாதையில் அமையும் தீர்மானங்களாகும். ஒரே அரசியல் கொள்கைக்கான காரணமாகும். ஊழல் எதிர்ப்பு, நாட்டுப்பற்று, ஜனநாயகத்தை வலுவூட்டுதல், நாட்டில் சிறந்தவொரு சமூகத்தைக் கட்டியெழுப்புதல் எமது மரபுரிமைகளைப் பாதுகாத்தல் ஆகிய பொதுவான பல விடயங்களே இவ் அரசியல் கோட்பாட்டினுள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

2015 ஜனவரி 09 ஆம் திகதி நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறுகணமே பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, 2015 ஜனவரி 08 ஆம் திகதி 62 இலட்சத்து ஐம்பத்தாயிரம் வாக்குகளைப் பயன்படுத்தி உருவாக்கிய அந்த தூய்மையான அரசியல் பயணத்தையும் அதன் கருப்பொருளையும் அப்பட்டமாக துவம்சம் செய்தார். அச்செயலை மூன்றரை வருடங்களாக சகித்துக்கொண்ட நான் மிக கடினமான பயணத்தை மேற்கொண்டேன். அது ஒரு இலகுவான பயணமல்ல. அமைச்சரவைக்கு இந்த நிலைமை தெரியும். ஆளும் கட்சிக்கும் தெரியும். மூன்றரை வருட பிரச்சினைகள் பற்றி நாட்டுக்கே தெரியும். ரணில் விக்ரமசிங்கவை நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தது திடீர் நிகழ்வல்ல. அது மூன்றரை வருட சவால் நிறைந்த கஷ்டமானதொரு பயணத்தில் மேற்கொண்ட தீர்மானமாகும். ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி அரசியல் எண்ணக்கருவை அப்பட்டமாக துவம்சம் செய்தது மட்டுமன்றி நாட்டையும் அழிவுக்குள்ளாக்கினார். ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் முக்கிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுக்குள்ளாக்கினார். அவரினால் நானும் பல பாதிப்புகளுக்கு உள்ளானேன். நல்லாட்சி அரசாங்கத்தை அழிவுக்குள்ளாக்கிய, நாட்டை அழிவுக்குள்ளாக்கிய, ஐக்கிய தேசியக் கட்சியை அழிவுக்குள்ளாக்கிய, ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்க முடியுமாகவிருந்த ஒரே தீர்வு அவரை பிரதமர் பதவியில் இருந்து விரட்டியடிப்பதே என நான் தீர்மானித்தேன். நாம் எமக்கு பொருத்தமான அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். மத்திய வங்கியில் இடம்பெற்ற பகல் கொள்ளை பற்றி நான் கடந்த காலங்களில் கூறினேன். 13வது அரசியலமைப்பினால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை அவர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து சில சட்டங்களின் மூலம் திரும்ப பெற்றார். அவர் கொண்டு வந்த பல சட்டங்களை நான் எதிர்த்தேன்.

அவருக்கு தேவையான வகையில் நாட்டை அழிவுக்குள்ளாக்கி வருவதை நான் என்னால் முடியுமானளவிற்கு கட்டுப்படுத்தினேன். எனினும் அவர் முரட்டுத்தனமாக நவீன தாராண்மைவாத அரசியல் கொள்கையை இந்த நாட்டை அழிவுக்குள்ளாக்கும் முறைமையாக பயன்படுத்தினார். அவர் வடக்கு மக்களை ஏமாற்றினார். வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழங்க முடியுமாகவிருந்த விடயங்களை நாட்டை துண்டாடாது, நாட்டை காட்டிக் கொடுக்காது, சமஷ்டி முறையில் அல்லாது அம் மக்களுக்கு வழங்க முடியமானவற்றை அவர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தினார். இந்த நிலைமைகளுக்கு மத்தியில் எடுக்கப்பட்டுள்ள அரசியல் தீர்மானம் நேற்றும் இன்றும் நாளையும் சரியானதே. கடந்த நாட்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள், ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கும், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவதற்கும், நாட்டுக்கு பொருத்தமான அரசியல் நிகழ்ச்சித் திட்டமொன்றை பலப்படுத்துவதற்கும், நாட்டையும் மக்களையும் பற்றி சிந்திக்கும் மனித நேயமிக்க பண்பட்ட அரசியல் பயணத்தை பலப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் நான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

நான் எனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐந்து வர்த்தமானி அறிவிப்புகளை வெளியிட்டேன். ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கவும், முன்னாள் அமைச்சரவையை இரத்துச் செய்வதற்கும் பராளுமன்றத்தை ஒத்தி வைக்கவும், பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் அந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த ஐந்து வர்த்தமானி அறிவித்தல்களிலும் நான் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி கைச்சாத்திட்டது தூய எண்ணத்துடனும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் ஊழலுக்கு எதிராக மனிதநேய சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கும் இந்த நாட்டை பாதுகாப்பதற்குமாகும் என்று நான் தெளிவாக குறிப்பிடுகின்றேன்.

இந்த அரசியல் நெருக்கடியும் அரசியல் அமைதியின்மையும் நமது நாட்டுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் 1947 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட ஒருவித புதிய அனுபவமாகும். ஆயினும் உலகிற்கு இதுவொரு புதிய அனுபவமல்ல. ஜனநாயக நாடுகளில் அண்மைக்காலமாக இவ்வாறான அரசியல் நெருக்கடிகளும் அமைதியின்மையும் ஏராளமாக ஏற்பட்டதை காரணக்கூடியதாகவே இருக்கின்றது. நமது பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அந்த மோதல்கள் மிக்க நடத்தைகளை கட்சி பேதமின்றி அருவருப்புடன் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அவை எவ்விதத்திலும் தகுந்த செயல்கள் அல்ல. எமது கோட்பாடுகளை நாம் ஜனநாயக ரீதியிலேயே வென்றெடுக்க வேண்டும். உடல் பலத்தால் அல்ல. வேகத்தால் அன்றி விவேகத்தாலும் மனோபலத்தாலும் ஆன்மீக வழியிலேயே அப்பிரச்சினைகளை நாம் வெற்றி கொள்ளுதல் வேண்டும்.

ஆகையால் இந்த அனைத்து தன்மைகளையும் கவனத்தில் கொண்டே இன்று ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த இரண்டு மூன்று வாரங்களாக உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றவர்கள் சமர்பித்த வழக்குகள் இதுவரை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அவற்றுள் சிலவற்றுக்கே இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இவை எவ்வகையான வழக்குகள்? இவை கொலை தொடர்பானவையோ? கொள்ளைகள் தொடர்பானவையோ? பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளோ அல்ல. மாறாக இவை அனைத்தும் அரசியல் வழக்குகளே. இந்த அரசியல் வழக்குகள் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி நாட்டுமக்கள் மத்தியில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆயினும் நான் எப்போதும் நீதிமன்றத்தை மதிக்கின்றேன். நீதிமன்றத்தினால் வழங்கப்படும் அனைத்து தீர்ப்புகளையும் நான் மிகுந்த கௌரவத்துடன் ஏற்றுக்கொள்வேன். இருப்பினும் நீதிமன்றத்தின் செயற்பாடுகளைப் பற்றிய மக்களின் கருத்து வேறுபட்டதாகவே இருக்கின்றது.

இந்த அரசியல் நெருக்கடி நிலைமைக்குள் நாம் ஒரு ஜனநாயக சமூகத்தின் சட்டத்தை மதிக்கும் ஒழுக்கமிக்க எப்போதும் அரசியல் யாப்பினை பாதுகாக்கும் வகையிலேயே நடந்து கொள்கின்றோம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். குறிப்பாக இங்கு காணப்படுகின்ற நிலைமைகளைக் கவனத்திற்கொண்டு நேற்று என்னை சந்தித்த ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் நான் மிகத் தெளிவாக எனது நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன் அவர்கள் இதுவரை என்னை மூன்று தடவைகள் சந்திருக்கின்றனர். அதன்போது மிகுந்த சிநேகபூர்வமாக நாம் கலந்துரையாடினோம். அனைத்து கட்சிகளுடனும் நாம் நட்புடனேயே பிரச்சினைகளை கலந்தாலோசிக்கின்றோம். அந்த வகையில் நேற்று மாலை ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் நான் கூறியதை இன்று இவ்விடத்திலும் கூறுகின்றேன். பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்களே இருக்கின்றார்கள். இந்த 225 உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கொடுத்தாலும் கூட நான் மீண்டும் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அமர்த்த மாட்டேன் என்பதை மீண்டும் மிகத் தெளிவாக கூறிக் கொள்கின்றேன். அதற்குக் காரணம் அவருக்கும் எனக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினையோ எம் இருவருக்கும் இடையிலான நிறங்கள் பற்றிய பிரச்சினையோ அல்ல. நான் அப்படி செய்வதற்கான காரணம் அவர் இந்த நாட்டுக்குப் பொருந்தாத அரசியல்வாதி என்பதினாலேயே ஆகும். அவரது நோக்கு இந்த நாட்டுக்கு உகந்ததல்ல. அவரது சிந்தனையும் இந்த நாட்டுக்கு உகந்ததல்ல. தேசியத்துவம், நமது என்ற உணர்வு, நமது மரபுரிமைகள், கலாசாரம், பழக்க வழக்கங்கள், நமது சம்பிரதாயம், நமது பௌத்த மற்றும் ஏனைய மத கோட்பாடுகள் ஆகிய எதுவுமே அவரிடம் இல்லை.

ஆகையால் நான் எடுத்த இந்த அரசியல் தீர்மானங்களினால் என்னை ஜனாதிபதி பதவியில் அமர்த்த பாடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் என்னுடன் கோபம் கொண்டிருப்பது மாத்திரமன்றி என் மீது கடும் வெறுப்பையும் கொண்டிருப்பார்கள் என நான் அறிவேன். அன்பின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே உங்களின் தற்போதைய தலைவர் உங்களின் மதிப்பு வாய்ந்த அரசியல் கட்சியை அழிவுக்குள்ளாகினார். டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச ஆகியோர் முன்னெடுத்த அந்த பாரிய அரசியல்கட்சி அந்த அரசியல் தலைவர்களின் கொள்கைகள் குறித்து எமக்கு சில கருத்து வேற்றுமைகள் உள்ளன. என்றாலும் அந்த அனைத்து தலைவர்களும் நாட்டை நேசித்தார்கள். அந்த அனைத்து தலைவர்களும் என்னுடையவும் உங்களுடையவும் தாய்நாட்டின் மீது பற்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்த நாட்டு மக்களின் துன்பங்களை விளங்கியிருந்தார்கள். என்றாலும் ரணில் விக்ரமசிங்க இந்த எந்தவொன்றையும் கவனத்தில் எடுக்கவில்லை.

எனவே, இந்த அனைத்து நிலைமைகளையும் கவனத்திற்கொள்ளும் போது முக்கியமாக நாட்டின் எதிர்காலத்திற்காக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிறைவேற்றுவோம். இதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்த வேண்டும். ஒருபோதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று ரணில் விக்ரமசிங்கவின் புதிய தாராண்மைவாத அரசியல் கொள்கைக்கு மாற்றீடாக தேசப்பற்றுள்ள ஒரே மனிதநேய அரசியல் கட்சி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டுமேயாகும் என நான் தெளிவாக கூறுகின்றேன்.

இன்று ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை கூடினால் இன்னும் 07 நாட்களுக்குள் முடிவுக்கு வருமென நான் தெளிவாக கூறிக்கொள்கிறேன். எதிர்வரும் வாரத்திற்கும் இந்த அரசியல் நெருக்கடியையும் அமைதியின்மையையும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவேன் என நான் உங்களிடம் தெளிவாக உறுதியளிக்கிறேன். அது நாட்டுக்காகவும் மக்களுக்காகவுமே ஆகும். இந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் சமாதான கரங்களை நீட்டுகின்றேன். நாம் ஒன்றாக இருந்து பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வோம். பிரச்சினையை உருவாக்கியது நானல்ல. பிரச்சினையை உருவாக்கியதும் நாட்டை அழிவுக்குள்ளாகியதும் ரணில் விக்ரமசிங்கவேயாவார் என நான் மிகத் தெளிவாக குறிப்பிட விரும்புகிறேன். அந்த அரசியல் பாவத்தை நாம் நாட்டுக்காக தீர்த்துக்கொள்வோம். அந்த நற்பணியில் அனைவரையும் பங்குதாரர்களாக்கிக் கொள்வோம். அதன் மூலம் நாட்டை பாதுகாப்போம்.

எனவே இன்று “தீர்மானம் நாட்டுக்காக” என்ற கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று முக்கியத்துவமிக்க இந்த விசேட தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்வதில் கட்சியின் அனைத்து தலைவர்களும் செய்த அர்ப்பணிப்பை நான் பாராட்டுகின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

 

 

Related posts

ஊரடங்குச் சட்டம் தொடர்பான விசேட அறிவிப்பு

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவர் மனு தாக்கல்

ஆசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்த கட்டணத்தில் மாற்றமில்லை